அமெரிக்கா-இந்தியா உறவில் பதற்றம்: ட்ரம்ப் பதிவுக்கு வலுக்கும் கண்டனம்! “Hellhole” என இந்தியாவை விமர்சிப்பதன் பின்னணி?

அமெரிக்காவின் பிறப்புரிமைக் குடியுரிமை முறையை இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் தவறாக பயன்படுத்துவதாக
"Hellhole" trump
Published on
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் பகிர்ந்த கருத்துகள் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இந்தியர்கள் மற்றும் இந்தியா குறித்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ‘பொருத்தமற்ற’ மற்றும் ‘தரமற்ற’ கருத்துக்களுக்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம், அமெரிக்க பாட்காஸ்டர் சாவேஜ்கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட நான்கு பக்க எழுத்துப்பதிவை ட்ரம்ப் தனது கணக்கில் பகிர்ந்ததிலிருந்து தொடங்கியது. அந்த பதிவில், அமெரிக்காவின் பிறப்புரிமைக் குடியுரிமை முறையை இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், அந்த கருத்துகளில் பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகள் அவமானகரமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ட்ரம்ப் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “இந்தக் கருத்துக்கள் தகவலற்றவை, பொருத்தமற்றவை மற்றும் தரம் தாழ்ந்தவை” என்று கடுமையாக விமர்சித்தது. மேலும், “இந்தியா-அமெரிக்க உறவு பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் நீண்ட காலமாக கட்டியெழுப்பப்பட்டதாகும்; இத்தகைய கருத்துக்கள் அந்த உண்மையை பிரதிபலிக்கவில்லை” எனவும் தெரிவித்தது. இந்த விவகாரம் அரசியல் மட்டத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த கருத்துகளை “மிகவும் அவமானகரமானவை மற்றும் இந்தியாவிற்கு எதிரானவை” என்று கண்டித்துள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடிஇந்த பிரச்சினையை அமெரிக்க அதிபரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்க உறவுகள் ஏற்கனவே சில முக்கிய பிரச்சினைகள் காரணமாக சிக்கலான நிலையில் உள்ளன. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், ஈரான் தொடர்பான நெருக்கடியை சமாளிக்க, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ட்ரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களுக்கு உயர்ந்த வரி விதித்ததும் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை பாதித்தது. பின்னர், இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக அந்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ அடுத்த மாதம் இந்தியா வருகை தர உள்ளார் என்பது உறவுகளை சீரமைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், குடியேற்றம் தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக, இந்தியர்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் H-1B விசா திட்டத்தையும் அவர் விமர்சித்துள்ளார். இந்த திட்டம் உலகளாவிய திறமைகளை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கான முக்கிய வழியாக இருந்தாலும், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தத்தில், ட்ரம்ப் பகிர்ந்த இந்த சர்ச்சைக்குரிய பதிவு, ஏற்கனவே பல சவால்களை எதிர்கொண்டு வரும் இந்தியா-அமெரிக்க உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com