
கடந்த ஜூலை 21 -ஆம் தேதி “'உடல்நலத்தை முன்னுரிமைப்படுத்தவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 67(அ) இன் படி, நான் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்' என்று ஜகதீப் தன்கர் தனது ராஜினாமாவை அறிவித்தார். அவரின் பதவிக்காலம் முடியவடையாத சூழலிலே அவர் பதவி விலக்கினார்.
அவர் பதவி விலகிய 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு புதியவர் நியமிக்கப்பட வேண்டும். இந்த சூழலில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு ; சி.பி.ராதாகிருஷ்ணன் -ஐ பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.
யார் இந்த சி.பி.ஆர்!?
சி.பி. ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும், சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் தனது இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபாட்டோடு விளங்கினார். தனது 16 -ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தன்னை இணைத்து கொண்டார்.
ஜூலை 31, 2024 முதல் தற்போது வரை மகாராஷ்டிராவின் 24வது ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். முன்னதாக அவர் பிப்ரவரி 2023 முதல் ஜூலை 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார். மார்ச் மற்றும் ஜூலை 2024 க்கு இடையில் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னராகவும் கூடுதல் பொறுப்பை வகித்தார்.
1998 மற்றும் 1999 என தொடர்ச்சியாக 2 முறை கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
இப்படி தொடர்ந்து பலகாலமாக பாஜக -வில் உழைத்து வரும் மூத்த தலைவர்களில் ஒருவரையே அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாஜக தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களிடம் பேசுகையில், 68 வயதான ராதாகிருஷ்ணனை வேட்பாளராகத் தேர்வு செய்தது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்னரே எடுக்கப்பட்டது என்றார். மேலும் பாஜகவின் மூத்த தலைவர்கள் எதிர்க்கட்சிகளையும் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவு கோரினர் என்றும் அவர் தெரிவித்தார். வேட்பாளரைப் பொறுத்தே தங்கள் முடிவை அறிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். குடியரசு துணைத் தலைவர் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறோம், என்று நட்டா கூறியுள்ளார்.
பாஜக -வின் வியூகம் என்ன!!?
பாஜக தமிழரான ராதாகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டு அரசியலை எல்லாம் கடந்து கொங்கு மண்டலத்தை குறிவைப்பதாக தெரிகிர்து. ஏற்கனவே திமுக கொங்கு மண்டலத்தில் பலவீனமாகத்தான் உள்ளது. கவுண்டர் சமூகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனை வேட்பாளராக மாற்றுவதன் மூலம் பாஜக -விற்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதைதான்.
ராதாகிருஷ்ணனுக்கு கொங்கு மண்டலத்தில் நல்ல ஆதரவு இருப்பதால், நேரடியாக திமுக -வால் அவர்களை எதிர்க்க முடியாது.
மேலும் இவரை துணை ஜனாதிபதியாக்குவதன் மூலம் ,நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அதிக அழுத்தத்தை தர முடியும் என்று பாஜக தலைமை சிந்திப்பதாக தகவல் வெளியாகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்