“நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல” - தொகுதி பங்கீட்டில் மூளும் வார்த்தைப் போர்.. இந்தியா கூட்டணியில் விரிசல்?

“தொகுதிகளுக்காக அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கையேந்தி நிற்கவில்லை” என்றும்...
rahul gandhi
Published on: 
Updated on: 
2 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தின் 2027 சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதற்கான தேர்தல் தயாரிப்புப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. மேலும் தொகுதிப் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடு தற்போது அதிகரித்துள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில், 100க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட காங்., விரும்புவதாகவும், ஆனால் 50க்கும் குறைவான தொகுதிகளே ஒதுக்க முடியும் என, சமாஜ்வாதி கறாராக கூறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. காங்கிரசுக்கு முதற்கட்டமாக, 26 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது சமாஜ்வாடி கட்சி. இதில், கடந்த தேர்தலில் காங்கிரஸ், வென்ற இரு தொகுதிகளும் அடங்கும். 

மேலும் இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், 'இது, தொகுதிகளை பற்றியது அல்ல.. வெற்றியை பற்றியது. இந்த, 26 தொகுதிகளை தவிர, காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து சொன்னால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசலாம்' என்று தெரிவித்துள்ளார். மேலும்  காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளை ஒதுக்கிய சமாஜ்வாடி கட்சியின் முடிவை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷிவ் பால் சிங் படேல் சரி என்ற கோணத்திலையே பேசியுள்ளார். காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால், தங்களது தொகுதிகளில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள் அதிருப்தி அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 2% வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும், சமாஜ்வாடி கட்சி சுமார் 32.5% வாக்குகளைப் பெற்றதாகவும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இந்த வாக்கு விகிதத்தின் அடிப்படையிலேயே காங்கிரஸுக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், கூட்டணி விவகாரத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே யாரையும் உயர்ந்தவராகக் கருத வேண்டிய அவசியமில்லை என்றும், அரசியல் தலைவர்கள் சுயபெருமையை விடுத்து தங்களது பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சமாஜ்வாடி கட்சி வெளியிட்ட ஐந்து வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலும் காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் போட்டியிட விரும்பியதாக கூறப்படும் பெஹத் மற்றும் சஹாரன்பூர் கிராமப்புறத் தொகுதிகளில் சமாஜ்வாடி வேட்பாளர்களை அறிவித்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத், “தொகுதிகளுக்காக அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கையேந்தி நிற்கவில்லை” என்றும், “நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல” என்றும் ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் தாங்கள் கேட்காமலேயே தொகுதிகளை அறிவித்துவிட்டு தற்போது பேச்சுவார்த்தை நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விவாதங்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது சமாஜ்வாடி - காங்கிரஸ் இடையிலான இந்த மோதல் உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2027 தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து எதிர்கொள்ளுமா அல்லது தொகுதிப் பங்கீட்டு விவகாரம் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் ஏற்கனவே இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த திமுக, 2026 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைத்தது. அதனையடுத்து திமுக கூட்டணியில் 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ், தேர்தலுக்கு பின் தவெகக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெற்றது. மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையும் தவெக உடனான கூட்டணியிலையே எதிர்கொள்ளும் என்றும் அறிவித்திருந்தது. அதன் பின்னர் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான பகை நிலவி வருகிறது என்றே சொல்லலாம். இதனால் இந்தியா கூட்டணியில் திமுக பங்கேற்பது சந்தேகம் தான். இந்நிலையில் உபி-யிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருவதோடு, வார்த்தை போரும் மூண்டுவருகிறது. இதனால் இந்தியா கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.