திரைப்படங்களில் மட்டுமே நிகழும் என்று நாம் நினைக்கும் சில நிகழ்வுகள், சில சமயம் நிஜ வாழ்க்கையிலும் நடந்தேறி நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்தூரில் ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த விசித்திரமான சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. வீட்டை விட்டு காதலனுடன் ஓடிச்சென்ற அந்தப் பெண், ஒரு வாரத்திற்குப் பிறகு வேறொரு ஆணுடன் திருமணமாகி திரும்பி வந்துள்ளார்.
காதலுக்காக வீட்டை விட்டு...
ஷ்ரத்தா திவாரி என்ற இளம் பெண், தனது காதலனான சார்த்தக் என்பவரை திருமணம் செய்துகொள்ளும் கனவுடன் ஆகஸ்ட் 23 அன்று வீட்டை விட்டு வெளியேறினார். இருவரும் சேர்ந்து ரயிலில் பயணம் செய்து திருமணம் செய்துகொள்வதாகத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, ஷ்ரத்தா இந்தூரில் உள்ள ரயில் நிலையத்திற்குச் சென்றார். ஆனால், காத்திருந்தது ஏமாற்றம்தான். சார்த்தக் வரவில்லை. தொலைபேசியில் அவரிடம் பேசிய சார்த்தக், தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திடீரெனக் கூறியுள்ளார்.
மனம் நொந்துபோன ஷ்ரத்தா, எந்த இலக்கும் இல்லாமல், ஒரு ரயிலில் ஏறி அமர்ந்தார். சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, ரத்லாம் ரயில் நிலையத்தில் இறங்கினார். தனது எதிர்காலம் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல், குழப்பத்துடன் அங்கேயே அமர்ந்திருந்தார்.
நிழல் போல் தொடர்ந்த நிஜ உதவி
ரத்லாம் ரயில் நிலையத்தில் தனியாக அமர்ந்திருந்த ஷ்ரத்தாவைக் கண்ட கரண்தீப் என்ற இளைஞர், அவரிடம் சென்று பேசியுள்ளார். கரண்தீப், இந்தூரில் உள்ள அவளது கல்லூரியில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்தவர். ஷ்ரத்தாவின் நிலையை முழுவதுமாகக் கேட்டறிந்த பிறகு, அவர் உடனடியாக வீட்டிற்குத் திரும்பிச் சென்று பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லும்படி அறிவுரை கூறியுள்ளார். ஆனால், காதலனால் கைவிடப்பட்ட மனவேதனையில் இருந்த ஷ்ரத்தா, "நான் திருமணம் செய்ய வீட்டை விட்டு வந்தேன், திருமணம் ஆகாமல் திரும்பினால் என்னால் உயிர் வாழ முடியாது" என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார்.
கரண்தீப் பலமுறை சமாதானம் செய்ய முயன்றும் ஷ்ரத்தா தனது முடிவில் உறுதியாக இருந்தார். இறுதியில், ஷ்ரத்தாவின் நிலைமையை உணர்ந்த கரண்தீப், அவரை திருமணம் செய்துகொள்ளத் தயார் என்று கூறியுள்ளார்.
ஒரு வாரத்தில் நடந்த விசித்திரத் திருமணம்
அதன்பிறகு, ஷ்ரத்தாவும் கரண்தீப்பும் மகேஷ்வர்-மண்ட்லேஷ்வர் கோயிலுக்குச் சென்று எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். அங்கிருந்து இருவரும் மன்ட்சௌர் நகருக்குச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில், மகளைத் தேடி அலைந்த ஷ்ரத்தாவின் தந்தை அனில் திவாரி, மகளைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ₹51,000 வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, ஷ்ரத்தா தனது தந்தையைத் தொலைபேசியில் அழைத்து, தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், திருமணம் நடந்ததாகவும் கூறியுள்ளார். மகள் உயிருடன் இருக்கிறார் என்ற நிம்மதியில், அனில் திவாரி ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் வீட்டிற்குத் திரும்புமாறு கூறியுள்ளார். நகருக்குத் திரும்பிய இந்த ஜோடி, எம்ஐஜி காவல் நிலையத்திற்குச் சென்று, ஷ்ரத்தா தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
சம்பவம் குறித்துப் பேசிய ஷ்ரத்தாவின் தந்தை அனில் திவாரி, “என் மகள் திரும்பி வந்தது எனக்கு நிம்மதி அளிக்கிறது. ஆனால், அவளை உடனடியாக கரண்தீப்புடன் வாழ அனுமதிக்க மாட்டோம். 10 நாட்களுக்கு இருவரும் பிரிந்து இருப்பார்கள். அதற்குப் பிறகும் ஷ்ரத்தா கரண்தீப்புடன் வாழ விரும்பினால், நாங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்வோம்” என்று கூறியுள்ளார். இந்தூர் காவல்துறையும், இந்தச் சம்பவம் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.