

டெல்லியிலும் மும்பையிலும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் நான்காவது நாளாக வலுப்பெற்றுள்ளது. தினமும் காவல்துறையினருக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கைகளால் கவனிக்கப்படுகிறார் நேகா போரா.
கடந்த ஜூலை மாதம் இதே ஜந்தர் மந்தரில் மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதுவரை இணையத்தில் கவனம் பெற்று வந்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி களத்தில் பாஜக அரசை அடிபணியச் செய்தது. அப்போது அபிஜித் தீப்கே மற்றும் அவரது சகாக்கள் கவனம் பெற்றனர். அதேபோல இந்த முறை ஜந்தர் மந்தரில் கவனம் ஈர்த்திருப்பவர் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) தலைவர் நேகா போரா.
அக்டோபர் 2-ம் தேதி நாடே விடுமுறையைக் கொண்டாடிக்கொண்டிருக்க, ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் ஜந்தர் மந்தரில் திரண்டார் நேகா. பலமுறை அவரை காவல்துறை கைது செய்த போதிலும், மீண்டும் மீண்டும் போராட்டக்களத்துக்குத் திரும்பினார். ஒவ்வொரு முறையும் இன்னும் தீவிரமாக காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். பேரிகார்ட் மேலே ஏறி, போலீஸ் சீருடையை கழற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ். டவுசரை அணிந்துகொள்ளுங்கள் எனச் சீறினார்.
டெல்லி காவல்துறையினர் 3 பத்திரிகையாளர்களை பாலியல் ரீதியாக சீண்டியதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டபோது, காவல்துறையின் அடக்குமுறைகள் மீது சம்மட்டி அடியாக விழுந்தது அவரது எதிர்ப்பு. இளைஞர்கள் போராட்டத்தை ஒடுக்க சுமார் 5,000 காவலர்கள் குவிக்கப்பட்டபோது, இந்தியா கேட் முதல் நாடாளுமன்றம் வரை பேரணி செல்வோம் என்று அறைகூவல் விடுத்தார். ஞானேஷ் குமார் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலில் இருந்து துளியும் பின்வாங்கத் தயாராக இல்லை நேகா. ஒவ்வொரு அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் இடையே அவரது தெளிவான அரசியல் பார்வைகொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஜென்சி இளைஞர்களுக்கான தலைவராக உருவாகிவரும் இந்த 29 வயது பெண் யார்? அவரது பின்னணி குறித்துப் பார்க்கலாம்.
நேகா போரா:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவர் நேகா. இப்போது AISA என்ற அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக உள்ளார். உத்தரகண்டைச் சேர்ந்த இவரது தந்தை ஒரு ராணுவ வீரர். அப்பாவின் வேலை காரணமாக நாடு முழுவதும் வெவ்வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் படித்திருக்கிறார். 10, 11 மற்றும் 12 வகுப்புகளை அவரது அப்பா மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதியில் பணியாற்றியபோது முடித்திருக்கிறார்.
வங்காளத்தில் இருந்த நாட்கள்தான் அவரை அரசியல்படுத்தியுள்ளன. இந்தக் காலகட்டத்தில் சாரு மஜும்தார், பாப்லோ நெரூடா மற்றும் அருந்ததி ராய் ஆகியோரின் எழுத்துகளைப் படித்ததாகக் கூறியிருக்கிறார். வாசிப்பில் இருந்து இடதுசாரி அரசியலை நோக்கிப் பயணித்திருக்கிறார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கியது முதல் மாணவர் அரசியல் இயக்கங்களிலும் பங்கெடுத்துள்ளார். பின்னர் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தவர். JNU-வில் முனைவர் பட்டத்துக்கான படிப்பில் சேர்ந்துள்ளார்.
தற்போது அவர் JNU-வின் கலை மற்றும் அழகியல் பள்ளியில் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்கிறார்; அவரது ஆய்வு நாடகம் மற்றும் நிகழ்த்துக்கலைகளில் அமைந்துள்ளது.
அவர் ஒரு நாடகக் கலைஞர் - சமூக ஆர்வலர் என்றும் கருதப்படுகிறார். படிப்பில் முன்னேறி, அரசியலிலும் வளர்ந்து, இன்று AISA தலைவராக உள்ளார். JNU அவரது கல்வி மற்றும் அரசியல் அடையாளமாக உள்ளது.
AISA என்பது என்ன?:
அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) என்பது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (ML)) விடுதலை கட்சியுடன் இணைந்த ஒரு இடதுசாரி மாணவர் அமைப்பாகும். நேகா போரா இதன் தேசியத் தலைவர்.
இந்த அமைப்பு, கல்வி, தேர்வுகள், பல்கலைக்கழகக் கொள்கைகள் மற்றும் மாணவர் உரிமைகள் தொடர்பான மாணவர் பிரச்சாரங்கள்/போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
August 9, 1990 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், பிரக்யராஜில் (அலகாபாத்) தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சமூக மாற்றம், கல்வி நிலைய வளாகங்களில் ஜனநாயகம், அறிவியல் கல்வி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றை பிரதான கொள்கைகளாகக் கொண்டு இயங்குகிறது.
டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள முக்கிய கல்லூரிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), டெல்லி பல்கலைக்கழகம் (DU), அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் இந்த அமைப்பு தீவிரமாக இயங்கி வருகிறது.
நேகா ஜந்தர் மந்தரில் நடந்த நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம், ஜார்கண்ட் மாணவர்கள் போராட்டம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் மூலம் கவனம் பெற்றுள்ளார்.
CJP உடன் இணைந்து பயணிக்கத் திட்டம்?:
மாணவர் தலைவராக இருக்கும் நேகா ஜென்சி தலைமுறையினரின் முக்கிய அரசியல் முகமாக உருவெடுத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் ஒருவர், கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் அபிஜித் தீப்கேவை விட நேகா போராதான் சிறந்த தலைவர் என்பதை உணருவதே முதிர்ச்சி என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு அபிஜித் தீப்கே, இந்தக் கருத்தைத் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார். அப்போது நேகா, “ஒற்றுமையே முக்கியம், ஒப்பீடு அல்ல. நாம் ஒன்றிணைந்து இதை எதிர்த்துப் போராடுவோம்” எனப் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்