ஆசிரியர் தினம் செப்டம்பர் 5-ல் கொண்டாடப்படுவது ஏன்? சுவாரஸ்யமான வரலாறு இதோ!

எல்லாவற்றிற்கும் மேலாக, தான் பயிற்றுவித்த ஒருவர் தன்னையும் மீறி வளர்ந்துவிட்டால் பொறாமைப்படாத ஒரே இனம் ஆசிரியர் இனம்தான்.
ஆசிரியர் தினம் செப்டம்பர் 5-ல் கொண்டாடப்படுவது ஏன்? சுவாரஸ்யமான வரலாறு இதோ!
Published on
Updated on
2 min read

தலைசிறந்த ஆசிரியரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவரும், 2-வது குடியரசுத் தலைவருமான, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். 1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணியில் பிறந்தார். தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இவர், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தத்துவயியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் பல பல்கலைக்கழகங்களில் தத்துவ பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

பின்னர், 1952-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை இந்தியாவின் முதல் குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, 1962-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது, டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு 1954-ல் வழங்கப்பட்டது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக மாறியது எப்படி?

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவராகப் பதவியில் இருந்தபோது, அவரது நண்பர்களும், மாணவர்களும் சேர்ந்து அவரது பிறந்தநாளைக் கொண்டாட விருப்பம் தெரிவித்தனர். அதற்கு அவர், "எனது பிறந்தநாளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதற்குப் பதிலாக, எனது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை அனைத்து ஆசிரியர்களின் சேவையையும் போற்றும் வகையில், ஆசிரியர் தினமாகக் கடைப்பிடித்தால் அது எனக்குப் பெருமை சேர்க்கும்" என்று கூறியுள்ளார்.

அதன் அடிப்படையிலேயே, 1962 முதல் ஆண்டுதோறும், செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அறிவார்ந்த மாணவர்களையும், சிறந்த சமூகத்தையும் உருவாக்கும் மிகப்பெரிய படைப்பாளிகள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையில்லை. கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமைத்திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை, சமூகம் கடவுளுக்கும் மேலாக வைத்துள்ளது. ஆம் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாக்கு ஆசிரியர்களின் மேன்மையை உலகிற்கு உணர்த்துகிறது.

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்பது ஔவையின் வாக்கு. அதாவது, ஒருவருக்கு அறிவையும், நல்லொழுக்கத்தையும், வாழ்வியல் திறன்களையும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுவர் என்பது இதன் பொருள். மாணவர்களுக்கு நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, கல்வி என அனைத்தையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர். மாணவர்களின் அறிவுத்திறனையும், குணநலன்களையும் வடிவமைப்பதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். வரலாற்றை உருவாக்க, எதிர்கால சந்ததியை சீரமைப்பவர்களாகவும் ஆசிரியர்கள் உள்ளனர். நண்பன், வழிகாட்டி, பெற்றோர், இறைவன் இந்த நான்கையும் ஒரு சேர, ஒரு நபரிடம் பார்க்க முடியும் என்றால் அவர் ஆசிரியர் மட்டும்தான்.

அறியாமை என்ற இருளில் மூழ்கி இருப்பவர்களுக்கு கல்வி என்னும் விளக்கை ஏற்றி வழிகாட்டுகிற புனிதமான பணியை செய்கிறவர்கள் ஆசிரியர்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்களாகவே உள்ளனர். இதனால் ஒரு மனிதனை நல்லொழுக்கத்தில் வளர்ப்பது கல்வியும், ஆசிரியரும்தான். "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்ற பழமொழிக்கு ஏற்ப மாணவர்களுக்கு கண் தருபவர்கள் ஆசிரியர்கள்தான். தன்னலம் கருதாமல் தனக்கு தெரிந்த திறமை, அறிவு, ஆற்றல் என அனைத்தையும், மாணவனுக்கு கற்றுத் தருபவர்கள் ஆசிரியர்கள்.

நாளைய விஞ்ஞானியை, பொறியாளரை, கல்வியாளரை, எழுத்தாளரை, கலைஞர்களை, அரசியல் தலைவர்களை உருவாக்குவது ஆசிரியர்களே. எல்லாவற்றிற்கும் மேலாக, தான் பயிற்றுவித்த ஒருவர் தன்னையும் மீறி வளர்ந்துவிட்டால் பொறாமைப்படாத ஒரே இனம் ஆசிரியர் இனம்தான். தன்னுடைய மாணவன் அல்லது மாணவி உயர் பதவியில் இருக்கும்போது, அந்த ஆசிரியர் மட்டும் ஏற்றி விட்ட ஏணியாக அதே இடத்தில் இருப்பார். ஆனால் இதற்காக அவர் ஒருநாளும் வருத்தம் கொள்வதில்லை. மாறாக, என் மாணவன் என்று மார்தட்டிக் கொள்வார். "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்ற குறளுக்கு ஏற்ப, தன் மகன் சான்றோன் என தாய் பெருமை கொள்வது போன்று, தன்னுடைய மாணவர்களின் வளர்ச்சியை பார்த்து பெருமை கொள்பவர்கள் ஆசிரியர்கள்.

இப்படிப்பட்ட பெருமைமிகு பணியை அயராது செய்யும் ஆசிரியர்களை போற்றி கொண்டாட ஒரு நாள் போதுமா...?

  • ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்...

  • வாழ்வில் நம்மை உயர்த்திய ஆசிரியர்களை வணங்குவோம்...

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com