"UPI-யில் இனி கட்டணம் வருமா?" வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசின் முக்கிய விளக்கம்!

அக்டோபர் 15, 2026 முதல் குறிப்பிட்ட Person-to-Merchant (P2M) UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR வசூலிக்கப்படும்.
UPI new rules 2026
UPI new rules 2026
Published on
Updated on
3 min read

பலருக்கும் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பணப்பரிவர்த்தனை முறையாகிவிட்ட UPI-யில் புதிய Merchant Discount Rate (MDR) அறிமுகமாக உள்ளதால், “இனி UPI மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக ₹2,000-க்கு மேல் செய்யப்படும் சில UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தச் செலவு வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுமா என்ற குழப்பமும் ஏற்பட்டது. இதற்கு அதிகாரிகள் தற்போது தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். புதிய விதிகளின்படி, அக்டோபர் 15, 2026 முதல் குறிப்பிட்ட Person-to-Merchant (P2M) UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR வசூலிக்கப்படும். அதாவது, ஒருவர் கடை, நிறுவனம் அல்லது சேவை வழங்குநருக்கு UPI மூலம் பணம் செலுத்தும்போது, அந்தப் பரிவர்த்தனை ₹2,000-ஐ தாண்டினால் சில குறிப்பிட்ட விதிகளின் கீழ் MDR பொருந்தும். ஆனால் இங்கு முக்கியமான விஷயம், இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்த வேண்டியதில்லை என்பதுதான்.

MDR என்பது UPI மூலம் பணம் பெறும் வணிகர்களிடம் இருந்து, அந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை செயல்படுத்தும் வங்கி, பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்கள் மற்றும் பிற payment ecosystem நிறுவனங்களுக்கு செல்லும் கட்டணம். இது அரசாங்கம் வசூலிக்கும் வரி அல்ல. UPI அமைப்பை தொடர்ந்து இயக்குவதற்கும், தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு, மோசடி தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்துவதற்கும் இந்த கட்டணத்தின் மூலம் கிடைக்கும் தொகை பயன்படுத்தப்படும் என்று அரசு விளக்கியுள்ளது. உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் ₹10,000 மதிப்புள்ள பொருளை வாங்கி UPI மூலம் பணம் செலுத்துகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். 0.4 சதவீத MDR என்றால் ₹40 ஆகும். ஆனால் அந்த ₹40-ஐ வாடிக்கையாளரிடம் கூடுதலாக கேட்கக்கூடாது. வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை ₹10,000தான். MDR என்பது வணிகர் தரப்பில் கணக்கிடப்பட்டு settlement நேரத்தில் கழிக்கப்படும் கட்டணமாக இருக்கும்.

அதேபோல், பெரிய தொகை செலுத்தும்போது MDR தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்லும் வகையில் இந்த விதி இல்லை. ₹75,000 மற்றும் அதற்கு மேல் உள்ள தகுதியான பரிவர்த்தனைகளுக்கு MDR அதிகபட்சமாக ₹300-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ₹1 லட்சம் UPI பரிவர்த்தனை நடந்தாலும், 0.4 சதவீதம் கணக்கில் ₹400 வர வேண்டிய நிலையில், நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு காரணமாக ₹300 மட்டுமே MDR ஆக இருக்கும். இதில் மற்றொரு முக்கியமான விஷயம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு இந்த MDR பொருந்தாது. நண்பருக்கு பணம் அனுப்புவது, குடும்ப உறுப்பினருக்கு பணம் அனுப்புவது, நண்பருடன் உணவு செலவைப் பகிர்ந்து கொள்வது அல்லது சொந்த வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை மாற்றுவது போன்ற Person-to-Person (P2P) பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும். பரிவர்த்தனை தொகை எவ்வளவு இருந்தாலும் இந்த விதி மாறாது.

₹2,000 அல்லது அதற்குக் குறைவான பல வணிக UPI பரிவர்த்தனைகளுக்கும் புதிய MDR பொருந்தாது. இதனால் வழக்கமாக கடைகளில் ₹500, ₹1,000 அல்லது ₹2,000 போன்ற சிறிய தொகைகளை UPI மூலம் செலுத்தும் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண விதியால் மாற்றம் இருக்காது. அரசு வெளியிட்ட தகவலின்படி, மொத்த P2M UPI பரிவர்த்தனைகளில் சுமார் 96 சதவீதம் புதிய MDR விதியால் பாதிக்கப்படாமல் தொடரும். சிறு வணிகர்களுக்கும் இதில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. UPI QR மூலம் மாதத்திற்கு ₹1 லட்சம் வரை பெறும் தகுதியான சிறு வணிகர்கள் zero-MDR முறையில் தொடர்வார்கள். இதனால் சிறிய கடைகள், உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் குறைந்த அளவில் டிஜிட்டல் பணம் பெறும் வணிகர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் விதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அப்படியானால் வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர் MDR தொகையை வசூலிக்க முயன்றால் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்காக வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக MDR செலவை வாடிக்கையாளர்களுக்கு மாற்றாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். UPI செயலிகள் தங்களது பெயரில் தனி platform fee அல்லது மறைமுக கட்டணங்களை வசூலிக்கவும் அனுமதி இல்லை என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. GST குறித்தும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. MDR-க்கு GST பொருந்துவது மற்றும் முழு UPI பரிவர்த்தனைத் தொகைக்கும் GST விதிக்கப்படுவது இரண்டும் ஒன்றல்ல. கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கங்களின்படி, UPI மூலம் செலுத்தப்படும் முழுத் தொகைக்கு தனியாக GST விதிக்கப்படாது. தகுதியான பரிவர்த்தனையில் MDR என்ற கட்டணம் வசூலிக்கப்பட்டால், அந்தக் கட்டணத்துக்கான GST விதிகள் தனியாகப் பொருந்தும்.

உதாரணமாக, ₹10,000 UPI கட்டணத்தில் MDR ₹40 என்றால், GST இருந்தாலும் அது ₹10,000 முழுத் தொகைக்கு கணக்கிடப்படாது; MDR தொகையை அடிப்படையாகக் கொண்டுதான் கணக்கிடப்படும். மேலும் தகுதி பெறும் வணிகர்களுக்கு அந்த GST-ஐ Input Tax Credit முறையில் சரிசெய்யும் வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றத்தின் பின்னணியில் UPI அமைப்பின் மிகப்பெரிய வளர்ச்சியும் உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் தினமும் UPI பயன்படுத்தும் நிலையில், தொழில்நுட்ப கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு, மோசடி தடுப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய MDR மூலம் கிடைக்கும் தொகை இந்த payment ecosystem-ல் செயல்படும் பல்வேறு நிறுவனங்களுக்கு பகிரப்படும்.

எனவே அக்டோபர் 15 முதல் UPI முற்றிலும் கட்டணமுள்ள சேவையாக மாறுகிறது என்று நினைக்க வேண்டியதில்லை. நண்பர் அல்லது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவது தொடர்ந்து இலவசம். ₹2,000 வரை செய்யப்படும் வணிகப் பணப்பரிவர்த்தனைகளும் புதிய MDR-ல் இருந்து விலக்கு பெறுகின்றன. சிறு வணிகர்களுக்கும் குறிப்பிட்ட பாதுகாப்பு உள்ளது. ₹2,000-க்கு மேல் உள்ள சில குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளில்தான் MDR அறிமுகமாகிறது; அதையும் வாடிக்கையாளரிடம் இருந்து தனியாக வசூலிக்கக் கூடாது என்பதே தற்போதைய முக்கிய விதியாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com