வலது சிறுநீரகத்திற்கு பதில் இடது சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்த டாக்டர்! பெண்ணின் உயிரிழப்புக்கு 2 கோடி ரூபாய் அபராதம்!

இறுதியில் ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரிப்பு மற்றும் சர்க்கரை அளவு குறைவு காரணமாக மரணமடைந்தார்...
kidney transplantation
kidney transplantation
Published on
Updated on
1 min read

சிகிச்சைக்காக வந்த பெண்ணின் ஆரோக்கியமான சிறுநீரகத்தை மாற்றி எடுத்த மருத்துவர் மற்றும் நர்சிங் ஹோமிற்கு, நுகர்வோர் நீதிமன்றம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அலிகாரைச் சேர்ந்த 56 வயது பெண்மணி ஒருவர், 2012-ஆம் ஆண்டு கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் ராஜீவ் லோச்சன், அவரது வலது சிறுநீரகத்தில் வீக்கம் (hydronephrosis) இருப்பதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைத்தார். அதன்படி, அந்த நர்சிங் ஹோமில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், மருத்துவர் தவறான சிறுநீரகத்தை அகற்றியது பின்னர் தெரியவந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை சீராகவில்லை. தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்ட நிலையில், அவர் மற்றொரு மருத்துவமனைக்குச் சென்று சிடி ஸ்கேன் (CT scan) உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார். அப்போது, நோயில்லாத ஆரோக்கியமான இடது சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பதும், நோய் பாதிப்புள்ள வலது சிறுநீரகம் அப்படியே இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, மருத்துவ வாரியத்தின் ஆய்விலும் மருத்துவரின் அஜாக்கிரதை உறுதி செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகள் வலியுடன் போராடிய அந்தப் பெண்மணி, இறுதியில் ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரிப்பு மற்றும் சர்க்கரை அளவு குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC), இதனை 'நீதித்துறை வரலாற்றில் அரிதாகவே காணக்கூடிய மிக மோசமான அலட்சியம்' என்று கடுமையாக விமர்சித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் ஏ.பி. சாஹி மற்றும் பாரத்குமார் பாண்டியா அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. தாயை இழந்த மகன்களுக்கும், மனைவியை இழந்த கணவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மருத்துவரின் அலட்சியத்திற்குப் பெரிய அளவிலான இழப்பீடு வழங்குவது அவசியம் என்று கூறினர்.

அந்த மருத்துவர் தனது வாதத்தில், அறுவை சிகிச்சையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று மறுத்தாலும், மருத்துவ வாரியம் மற்றும் மாநில மருத்துவக் கவுன்சிலின் அறிக்கைகள் அவர் மீது குற்றச்சாட்டை உறுதி செய்தன. முன்னதாக, இந்த மருத்துவரின் மருத்துவப் பதிவு (medical registration) இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடாக 2 கோடி ரூபாயை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இதில் 1.5 கோடி ரூபாய் மருத்துவரின் அலட்சியத்திற்காகவும், தலா 10 லட்சம் ரூபாய் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிற்காகவும், மீதமுள்ள தொகை சட்ட செலவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மருத்துவ உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com