
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வரலாற்று வெற்றியை பெற்றது. குறிப்பாக, பாஜக மட்டும் 132 இடங்களை கைப்பற்றியது. இருப்பினும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஏக்நாத் ஷிண்டே மறுத்து வந்தார். இதன் காரணமாக முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்த நிலையில், பதவியேற்புக்கான தேதியை பாஜக அறிவித்தது.
இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். துணை முதலமைச்சராக அஜித் பவாரும் தேர்வானார். இதனைத்தொடர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் நேற்று உரிமை கோரப்பட்டது. இருப்பினும், துணை முதலமைச்சராக பொறுப்பேற்க ஏக்நாத் ஷிண்டே சம்மதம் தெரிவிக்காத நிலையில், இன்று கடைசி நேரத்தில் பதவியேற்க ஒப்புக்கொண்டார்.
மும்பை அசாத் மைதானத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தேவேந்திர பட்னாவிஸ், 3-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர், துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இதேபோல், பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், ஷாருக்கான், சஞ்சய் தத், ரன்வீர் சிங், ரன்பீர் கபுர் உள்ளிட்ட நடிகர்களும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடனும், பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.