Maria Wilson: "என்ன கேலி பண்றீங்களா?" - ஆவேசமாக மைக்கை அடித்த நிதியமைச்சர்; சமாதானம் செய்த எ.வ.வேலு!

"என்னுடைய கிறிஸ்தவம் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிற மொழி அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. இது எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது. நான் பைபிளில் படித்திருக்கிறேன்." - மரியா வில்சன்
Maria Wilson
Maria WilsonAI Enhanced
Published on
Updated on
3 min read

இன்று தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினர் தி.மு. இராசேந்திரனின் பேச்சும், அதற்கு தவெக அமைச்சர்கள் அளித்த பதிலடியும் பேசுபொருளாகியுள்ளது.

மதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இராசேந்திரன். தற்போது அவர் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அவையில் பேசுகையில், "நிதியமைச்சர் அவர்கள் தென்கோடி முனையில் உள்ள எங்கள் குமரி மாவட்டத்தின் மாப்பிள்ளை என்ற முறையில், அவருக்கு எனது மதிப்பை பதிவு செய்கிறேன். ஆனால், அவர் பட்ஜெட்டை வாசிக்கும்போது, நான் ஒரு சொற்பொழிவாளர் என்ற முறையில் சில விஷயங்களைக் கவனித்தேன். தமிழில் பல சொற்றொடர்களை அவர் பேசாமல் விட்டுவிட்டார். சில சொற்றொடர்கள் இலக்கணப் பிழைகளுடன் அமைந்திருந்தன. இதைக் குறையாகவோ, குற்றச்சாட்டாகவோ நான் வைக்க விரும்பவில்லை.

திமு இராசேந்திரன்
திமு இராசேந்திரன்

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தனது கட்சிக்காகச் சிறப்பாக வாதாடி பலம் சேர்க்கிறார் என்பதை நாங்கள் காண்கிறோம். நீங்கள் (ராஜ்மோகன்), நமது நிதியமைச்சர் வருங்காலத்தில் பிழையின்றி பட்ஜெட்டை வாசிக்க முயற்சிகள் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..." எனப் பேசினார்.

இந்தப் பேச்சு தவெக உறுப்பினர்களைச் சீண்டியது. இதற்குப் பதிலளித்த ராஜ் மோகன், "தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் என்ற வகையில் நான் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

நீங்கள் (சபாநாயகர்) குறுக்கிடும்போது, அவரை (இராசேந்திரன்) அறியாமல் ‘ஊடால ஊடால’ என்றார். அதேபோன்று, ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பு இருக்கும். நெல்லைத் தமிழ் கொஞ்சும், மதுரைத் தமிழ் வாழ்வீசும், குமரித் தமிழ் அலையாடும், சென்னைத் தமிழில் உழைக்கும் மக்களின் வேர்வை வாசம் வீசும்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன்
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன்

உறுப்பினர் என்னுடைய தமிழைப் பாராட்டி, நிதியமைச்சர் என்னிடம் வகுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பேசினார். அப்படியென்றால், எதிர்க்கட்சித் தலைவர் (உதயநிதி ஸ்டாலின்) என்ன சங்கத்தமிழா பேசுகிறார்? சாதாரணத் தமிழில்தான் பேசுகிறார்.

வகுப்பெடுக்க வேண்டுமென்றால், நேர்மையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததற்காக நிதியமைச்சரிடம்தான் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வகுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்" எனப் பேசினார்.

தொடர்ந்து கோபத்துடன் எழுந்த நிதியமைச்சர், "சார், நான் ஒரு பேஸ்கட்பால் பிளேயர். நான் ஆஃபென்ஸ் (தாக்குதல்) ஆடுவேன், டிஃபென்ஸும் (தடுத்தல்) ஆடுவேன். எப்போது என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

நான் 25 முதல் 30 ஆண்டுகளாக எஜுகேஷன் ஃபீல்டில் (கல்வித் துறையில்) இருந்திருக்கிறேன். என்னுடைய கம்யூனிகேஷன் ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கிறது. இப்போது கொஞ்ச நாட்களாகவே உருவத்தை, சாதி தொடர்பாக, பெண்கள் தொடர்பாகக் கேலி செய்தவர்கள், இப்போது மொழி தொடர்பாகவும் செய்கின்றனர்.

எங்கள் தலைவர் ‘செயல், செயல்’ என்றுதான் சொல்கிறார். என்னுடைய கிறிஸ்தவம் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் மொழி அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி. இது எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது. நான் பைபிளில் படித்திருக்கிறேன்.

 மரிய வில்சன்
மரிய வில்சன்

கடந்த 60 முதல் 75 நாட்களாக முதல்வர் பல மீட்டிங்குகளை நடத்தியிருக்கிறார். பல சீரமைப்புகளைச் செய்திருக்கிறோம். 70 நாட்களுக்கு முன்பு இருந்த நிலைமையும், இப்போது இருக்கும் நிலைமையும் முற்றிலும் வேறு. சுமார் 15,000 கோடி ரூபாய் கருவூலத்துக்கு வந்திருக்கிறது. இது எளிமையான விஷயம் இல்லை. இது எங்கள் அமைச்சர்களின் கடின உழைப்பால் வந்தது.

இதையெல்லாம் பாராட்டாமல் எனக்கு அட்வைஸ் கொடுப்பது தேவையில்லை. எனக்கு இப்படித்தான் பேச முடியும். உங்களுக்காக மாற்றிக்கொள்ள முடியாது. கேலி பண்றீங்களா?" எனக் கேட்டு, கோபத்துடன் டப் என மைக்கை கீழே வைத்தார்.

பின்னர் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அண்ணாவின் கொள்கை இருமொழிக் கொள்கை. இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய பட்ஜெட் உரையில், அக்கவுண்ட்ஸ் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் அவர் தெளிவாகப் பேசியிருக்கிறார்.

இந்த விஷயம் திமுக ஆட்சியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் நடந்ததுதான். அவர் அமெரிக்காவில் அக்கவுண்ட்ஸ் படித்துவிட்டு வந்தவர். அவர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போதும் இதுபோன்று நடந்தது. ஆனால், அப்போது யாரும் கேலியோ கிண்டலோ செய்யவில்லை.

அண்ணன் ஆனந்த் சென்னையைச் சேர்ந்தவர் அல்ல; புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவர் புதுச்சேரி - கடலூர் மொழி வழக்கில் பேசுவார். ஆனால், தமிழில் பேசுகிறார் என்பதுதான் முக்கியம். உங்கள் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேச வைக்காமல், கருத்துகளை முன்வைத்தால் சரியாக இருக்கும்" என்றார்.

சமாதானப்படுத்தும் வகையில் பேசிய எ.வ. வேலு, "நிதியமைச்சர் கோபப்படத் தேவையில்லை. அவர் புதிய சட்டமன்ற உறுப்பினர். கன்னிப் பேச்சு பேசுகிறார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மொழி வழக்கு உண்டு" என்றார்.

தமிழ் - ஆங்கிலப் பயன்பாடு குறித்து விளக்கமளித்த சபாநாயகர், "பொது நடைமுறை விதிகளின்படி, பேரவையின் அலுவல்கள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் நடைபெறலாம்.

இங்கு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் தெலுங்கில் பேசத் தொடங்குவார். அம்மா சிரித்துவிட்டு, தெலுங்கிலேயே பதில் சொல்வார். இதெல்லாம் நடந்திருக்கிறது" என்றார்.

Maria Wilson
DMK vs TVK: பேப்பர் படிச்சா போதாது; மாமனார் கிட்ட கேளுங்க - சட்டமன்றத்தில் ஸ்கோர் செய்தது யார்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com