அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - ஐகோர்ட் தீர்ப்பு

அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ள நிலையில் அதிமுக வட்டாரத்தில் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - ஐகோர்ட் தீர்ப்பு
Published on
Updated on
2 min read

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்தை நாடியிருந்தனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதே நேரம் இந்த தடையை நீக்க கோரி முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருதரப்பினரும் தங்கள் வாதங்களை வைத்து வந்தனர். பெரும்பாலான உறுப்பினர்கள் ஓ.பி.எஸ் பக்கம் இருக்கிறார்கள் என்றும், அதனால் இதனை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என ரவீந்திரநாத் தரப்பு வாதிட்டது.

இதற்கு எடப்பாடி தரப்பு, கட்சியில் எந்த பிளவும் இல்லை, இபிஎஸ்-க்கு இருந்த ஆதரவு இன்னும் அப்படியேத்தான் உள்ளது. ஆகவே கட்சி விதிகளில் திருத்தம் செய்து புதிய தலைமை தேர்வு செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், உள்கட்சி விவகாரங்களில் தலையிடுவதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என வாதிட்டது.

மேலும் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், சின்னத்தை முடக்குவது கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என இபிஎஸ் தரப்பு முன்வைத்திருந்தது. இவ்வாறு இரு தரப்பினரும் கூறி வந்த நிலையில், தேர்தல் ஆணையம் மற்றொரு கருத்தை எடுத்து வைத்தது.

Summary

அனைத்து தரப்பினர் விளக்கத்தை கேட்கும் வகையில் வெறும் நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டதாகவும், தற்போது வரை அதிமுக உட்கட்சி விவசாரம் குறித்து விசாரிக்கலாமா? வேண்டாமா? என எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், அருள் முருகன் அமர்வு தீர்ப்பை வழங்கியது. அ.தி.மு.க உள்கட்சி விவகாரத்தில் விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உண்டு என தெரிவித்த நீதிபதிகள், தடை கோரி வழங்கிய எடப்பாடி பழனிசாமி தரப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் ஆணையத்திற்கான தடையை நீக்கியதற்காக நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார். அதிமுக விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு இனி எந்த அதிகாரமும் இல்லை என பேசியவர், இரட்டை இலையை முடக்குவது எங்கள் நோக்கம் அல்ல, மாறாக எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக்கூடாதுதான் என்பதே எங்கள் நோக்கம் என கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com