

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தல் என்றாலே அது ஆளும் கட்சிக்குத்தான் ஆதரவாக இருக்கும் என்ற நிலை உள்ளது. தேர்தல் அறிவிக்கப்படும் முன்னர் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கணக்கு வைத்திருந்தனர். அதைப் பொறுத்தே வேட்பாளர்களைத் தேர்வு செய்தனர்.
பிரசாரத்திற்குச் செல்லும்போது தேர்தல் களம் முற்றிலும் எதிர்பாராததாக மாறியிருக்கிறது. பொதுவாக எந்த முதலமைச்சரும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால், இன்றைய முதல்வர் இரண்டு தொகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், வேட்பாளர்கள் எதிர்பாராத எதிர்ப்புகளைச் சந்தித்ததுதான். குறிப்பாக, கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலையும், தாராபுரத்தில் சத்யபாமாவையும் வெற்றி பெற வைத்த மக்கள், அதே வேட்பாளர்கள் விசில் சின்னத்தில் வாக்கு கேட்பதைக் கண்டு கொந்தளித்துள்ளனர்.
இந்தக் கொந்தளிப்பில் எண்ணெய் ஊற்றும் வேலைகளை கச்சிதமாகச் செய்து வருகின்றன எதிர்க்கட்சிகள். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தனக்கு நடந்துள்ள துரோகத்தைச் சுட்டிக்காட்டி அனுதாபங்களை அள்ளுகிறார்.
அதே நேரத்தில், கடுமையாகவும் நேரடியாகவும் விஜய்யைத் தாக்குகிறார். (திமுக தலைவர் விஜய்யை நேரடியாகத் தாக்குவதில்லை; முதலமைச்சர் என்றே அணுகுகிறார்.)
எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கொடுப்பதில் திமுகவை விஞ்சுகிறது தவெக. சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவைப் பொருட்படுத்தாமல், திமுக vs தவெக என்ற முழக்கத்துடனேயே 108 தொகுதிகளை வென்றனர். ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அது வேலைக்கு ஆகுமா என்பதில் தவெக முகாமில் தெளிவில்லை.
மேடையில் விஜய், அதிமுகவை தீர்ந்துபோன சக்தி மற்றும் பலர் என ஓரங்கட்ட முயற்சித்தாலும், களத்தில் வேட்பாளர்களுக்கு பெரும் நெருக்கடியாக இருப்பது அதிமுகதான்.
எடப்பாடி அனுதாபங்களைப் பெறுவதைத் தடுக்க தவெக வசம் இருக்கும் முக்கிய ஆயுதம், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டுதான். இப்போது, தவெக ஆட்சியமைந்துவிட்ட பிறகும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து மக்கள் பெரிதும் கவலையடைகிறார்களா என்பதில்தான் தேர்தல் வெற்றியும் தோல்வியும் இருக்கிறது.
அந்தக் கவலையை ஏற்படுத்த தவெக வேட்பாளர்கள் இதுநாள் வரை தவறியிருக்கின்றனர் என்பதைத்தான் களத்தில் பார்க்க முடிகிறது. மேலும், ‘பெட்டி’ வாங்கிக்கொண்டு கட்சி மாறியவர்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளத் திணறி வருகின்றனர்.
வேட்பாளர்களைத் தவறாகத் தேர்ந்தெடுத்துவிட்டோமோ என்று கூட தவெகவினர் சிந்திக்கும் நிலை வந்துள்ளது.
தவெக நம்பும் மற்றொரு ஆயுதம் விஜய்யின் முகம். பிரசாரத்துக்குப் போகும்போதும், வரும்போதும் கூட்டம் அள்ளுகிறது. இது கடந்த முறைப் போலவே வாக்காக மாறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
மதுராந்தகத்தைப் பொறுத்தவரை, தவெக இரண்டாம் இடம் பெற்றிருந்தது. சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்திருந்தது. ஆனால், தாராபுரத்தில் தவெகவுக்கும் அதிமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் சுமார் 34,000. இந்தப் பெரிய இடைவெளியை விஜய்யின் முகம் குறைக்குமா என்பது மிகப் பெரிய கேள்வி.
பிரசார மேடைகளில் பற்றவைத்த வார்த்தைப் போர், ஐடி விங் வழியாக ஆன்லைனில் வெடித்துள்ளது. இரண்டு தலைவர்களையும் வார்த்தைகளால் பிழிந்தெடுக்கின்றன ஐடி விங்குகள்.
திமுக vs தவெக என்ற விஜய்யின் நரேட்டிவைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது அதிமுக. தாராபுரம் பிரசாரத்தில் அதிமுகவுக்கு எதிராக விஜய் அதிகம் பேசுவார் என எதிர்பார்க்கலாம்.
மற்றொரு அதிமுகவாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயல்வதால், சர்க்காரியா கமிஷன் போல, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பழைய கதையெல்லாம் இழுக்காமல் எடப்பாடியை மட்டுமே குறிவைப்பார் எனலாம்.
அப்படி எடப்பாடியை எதிர்த்துப் பேசுவதென்றால், பாஜகவையும் இணைத்தே எதிர்க்க வேண்டியிருக்கும். முதல்வர் அதற்கு தயாராக இல்லை என்றால், அதிமுக உட்கட்சிப் பிரச்சனைகளையும், திமுகவுடன் ரகசிய கூட்டணி வைக்க முயன்றதாகவும் அழுத்தமாகப் பேசுவார்.
சட்டமன்றத் தேர்தலின்போது திமுக - தவெக என களத்தை வைத்திருந்தார் விஜய். எடப்பாடி பழனிசாமி கடுமையாகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோதும் ஓரங்கட்டப்பட்டார். இன்று அதே நிலையில் இருக்கிறது திமுக.
ஏற்கெனவே அதிமுகவுக்கு வாக்களித்த மக்களிடம் சென்று, தவெகவை எதிர்த்து பிரசாரம் செய்துவிட்டு திமுகவுக்கு வாக்கு கேட்பது சற்று குழப்பமான செயல்முறையாக இருக்கிறது. நீண்ட காலம் இருதுருவ அரசியலில் மட்டுமே பங்கெடுத்திருந்த கட்சிக்கு இது கடினமான டாஸ்க்தான்.
விஜய்க்கு வாக்களித்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் என உதயநிதி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவுக்கு வாக்களித்தால், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுபவரும் தவெகவில் இணைந்துவிடுவார் என ஜாலியாகப் பிரசாரம் செய்து வருகிறார்.
வலிமையான எதிர்க்கட்சியாக நிலைத்திருக்க, தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது. ஒருவேளை இரண்டு தொகுதிகளிலும் தோற்றால், திமுக வெற்றி பெறாதது மக்களின் தவறு என்ற நிலை மாறி, திமுகவைத் தோற்கடித்தது மக்களின் தீர்ப்பு என மாறிவிடும். ஆனால், தவெக - அதிமுக சிக்கலின் நடுவே எதில் கவனம் செலுத்துவது எனத் தெரியாமல் விழிப்பிதுங்கியிருக்கிறது திமுக முகாம்.
இந்தத் தேர்தலை எளிதாக இரண்டு கருத்துருவாக்கங்களுக்கு இடையிலான போராட்டமாகக் கொள்ளலாம்.
முதலாவது, பெட்டி வாங்கிக்கொண்டு கட்சி மாறிய வேட்பாளர்கள். வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்பளித்த கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டனர்.
மற்றொன்று, அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயன்றனர். இருவரும் மக்களுக்கு எதிரானவர்கள்.
இந்த இரண்டு கருத்துருவாக்கங்களில் எது அதிக மக்களால் நம்பப்படுகிறதோ, அதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். இதைக் குறிவைத்தே பிரசார நகர்வுகளும் உள்ளன.
நடக்கும் ஐந்துமுனைப் போட்டியில், இந்த இரண்டையும் நம்பும் மக்கள் வாக்களிக்க நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் போன்ற மற்ற ஆப்ஷன்களும் உள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்