174 நெல் வகைகளுடன் தொடங்கியது 16ம் ஆண்டு தேசிய நெல் திருவிழா!

174 நெல் வகைகளுடன் தொடங்கியது 16ம் ஆண்டு தேசிய நெல் திருவிழா!
Published on
Updated on
2 min read

திருவாரூர்: திருவாரூரில் 16ம் ஆண்டு தேசிய நெல் திருவிழா, 174 வகையான பாரம்பரிய நெல் வகைகளுடன் தொடங்கியது. 

கடந்த 2007ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழாவை தொடங்கி வைத்தார், நம்மாழ்வார். நம்மாழ்வாரின் மறைவுக்கு பின், அதனை முன்னெடுத்து நடத்தி வந்தவர் மறைந்த நெல் ஜெயராமன் ஆவார். 

தமிழர்களால் பாரம்பரியமாக சாகுபடி செய்து, பின்னர் மறைந்துபோன நெல் ரகங்களை மீட்பதே, பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த நெல் திருவிழாவின் நோக்கம். ஆரம்பத்தில் இந்த நெல் திருவிழா 10க்கும் மேற்பட்ட மறைந்து போன நெல் வகைகளுடன் தொடங்கபட்டது.
 
ஆனால், தற்போது மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, காட்டுயானம், யானைக்கவுனி, சீரக சம்பா, கிச்சலி சம்பா, கருடன் சம்பா, தூயமல்லி, குள்ளக்கார் உள்ளிட்ட 174 நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு விவசாயிகளுக்குள்ளாகவே பரிமாற்றம் செய்து வழக்கில் இருந்து மறைந்த பாரம்பரிய நெல் ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 16வது பாரம்பரிய நெல் திருவிழா ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மையம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது.

திருத்துறைப்பூண்டி உழவர் சந்தை பகுதியில் இருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு நெல் கோட்டை வைத்து மாட்டுவண்டியில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு விவசாயிகள் ஊர்வலமாக வந்து இத்திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். 

இந்த நெல் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, நாகை, திருச்சி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட விவசாயிகளும் இந்த நெல் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

பாரம்பரிய நெல் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் அரங்கங்கள் அமைக்கப்பட்டு அவற்றை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

நெல் திருவிழாவின் முக்கிய நோக்கமான இயற்கை பாரம்பரிய நெல் ரகங்களை பங்கேற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு அவற்றை சாகுபடி செய்து அடுத்த ஆண்டு நான்கு கிலோவாக விவசாயிகள் திருப்பி அளிக்க உள்ளனர்.

இதன் மூலமாக பாரம்பரிய இயற்கை நெல் ரகங்கள் சுழற்சி முறையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com