

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் நீண்ட நாட்களாக மின்சாரக் கொள்முதல் குறித்த சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து, அதைவிட அதிக விலைக்கு மீண்டும் டெண்டர் கோரப்பட்டதும், பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் அதை ரத்து செய்ததாக அறிவித்ததும் பேசுபொருளானது.
இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு, மின்சாரத்துறையில் நிர்மல்குமார் எடுத்த முடிவுகளால் ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) சொந்த மின் உற்பத்தியைக் குறைத்தும், நீண்ட கால மற்றும் குறுகிய கால மின் கொள்முதலைத் தனியாரிடம் குறைத்தும், கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 13 வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.37 வீதம் தினமும் 2 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்ததன் மூலம் 29 நாட்களில் வாரியத்திற்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக வரும் தகவல் உண்மையா?
யார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் இந்த முடிவுகளை எடுத்தார்கள் என்பதை விசாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா, CM சார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிர்மல்குமார் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே இத்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகம் மின் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது. பல ஊர்களில் மக்கள் இரவு நேரங்களில் போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்குப் பிரச்சினை தீவிரமடைந்தது. அப்போது, பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்காத அமைச்சர், மின் சாதனங்கள் திருடுபோவதாகக் காரணம் கூறினார்.
அதைத் தொடர்ந்து, டிரான்ஸ்ஃபார்மர்கள் உள்ளிட்ட மின் கட்டமைப்புகள் பழையதாகிவிட்டதால் மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
காற்றாலை மின் உற்பத்தி எதிர்பார்த்த அளவைவிடக் குறைந்தது, மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் எதிர்பார்த்த அளவுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை எனக் காரணங்களைக் கூறி, தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்க முடிவெடுக்கப்பட்டது.
சில ஒப்பந்தங்களில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.35.92, ரூ.35.93, ரூ.37 என விலை நிர்ணயிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களைத் தீட்டாமல், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி, "ஏற்கெனவே பல லட்சம் கோடி ரூபாய் கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து, கடைசியில் தனியாருக்குத் தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.