தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 13 ஆயிரத்து 807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்த தங்கம் தென்னரசு, ,இந்த திட்டத்தில் புதிய பயனாளர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மகளிர் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி வரும் நிதியாண்டில் 10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும், சுய உதவிக் குழுக்களுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், நடப்பு நிதியாண்டில் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு 3 ஆயிரத்து 600 கோடியும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 13 ஆயிரத்து 807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை சேர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மகளிருக்கு 20 சதவீத மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை தொழில் முனைவோர் கடன் வழங்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 லட்சம் ரூபாய் வரை அசையா சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் ஒரு சதவீதம் பத்திரப்பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்