திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடிக்கு திருப்பணி...துவங்கி வைத்த முதலமைச்சர்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடிக்கு திருப்பணி...துவங்கி வைத்த முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உட்பட 300 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

2021-22 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக திட்டம் தீட்டப்பட்டுள்ள நிலையில், 300 கோடி ரூபாய் செலவில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இப்பணிகளை தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு இருப்பதை  எடுத்துரைக்கும் வகையில், போலி ஆவணப் பதிவால் பாதிக்கப்பட்ட சொத்து உரிமையாளர்கள் 5 பேருக்கு, ஆவணத்தை ரத்து செய்ததற்கான ஆணைகளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 

மேலும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் வசதி மற்றும் திருமண சான்றுகளில் திருத்தம் தேவைப்படின அவற்றை இணையம் வழியாக விண்ணப்பித்து பெறும் வசதியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து டிஆர்பி தேர்வில் தேர்ச்சிப்பெற்று பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com