”மணிப்பூரிலிருந்து வந்த வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.35 ஆயிரம் ரூபாய் செலவாகிறது” - உதயநிதி

”மணிப்பூரிலிருந்து வந்த வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.35 ஆயிரம் ரூபாய் செலவாகிறது” - உதயநிதி
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் இருந்து வந்திருக்கும் வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 35 ஆயிரம் செலவாகிறது, இவர்களுக்கு செலவு செய்வதை நாங்கள் பெரிதாக பார்க்கவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பயிற்சி எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை ஏற்று சென்னைக்கு 15 வாள்வீச்சு வீரர்கள் மணிப்பூரில் இருந்து வந்துள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்ட மணிப்பூர் வீரர்களை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மணிப்பூரில் அசாதாரண சூழல் நிலவி வருவதால், அங்கு இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு கொடுத்தார். அதன்பேரில் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள வால் வீச்சு வீரர்கள், இங்கு இருக்கக்கூடிய வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து பேசியவர், இந்த முறை இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவுள்ளதால், அவர்களுக்கு இது மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், தற்போது தமிழகம் வந்திருக்கக்கூடிய வால் வீச்சு வீரர்கள் அனைவரும் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு அவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றும், இவர்கள் இங்கு ஒரு மாதம் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும், இவர்களுக்கு செலவு செய்வதை நாங்கள் பெரிதாக பார்க்கவில்லை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com