
கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.
ஆனால் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில்தான் அதிமுக -வும் பாஜக -வும் விஜயை அரவணைத்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் இணையும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து பேசினார்.
சமீபத்தில் அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றி கழக (தவெக) கொடி பறந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். முதலில் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள், பிறகு மக்கள் ஒன்றிணைவார்கள். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஒரே அணியில் திரளப் போகிறார்கள்," என்றார். தவெக கொடி பாஜக கூட்டத்தில் எப்போது பறக்கும் என்ற கேள்விக்கு, தற்போது அதற்கு பதிலளிக்க இயலாது என புன்னகையுடன் பதிலளித்தார். அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்ததும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது என கூறியதும் அரசியல் வட்டாரத்தில் புதிய கூட்டணி சமன்பாடுகளுக்கான ஏற்படுத்தியுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்காதது குறித்த கேள்விக்கு, "விஜய்-ன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். கரூர் சென்றால் விஜய் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. 41 பேரை அடித்து மிதித்து கொன்றிருக்கிறார்கள் அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரியுள்ளார்," என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுக தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாக நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடினார். மேலும் அவர் பேசுகையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சொத்து வரி மற்றும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை," என்றார். மேலும், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும், தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கேங்மேன், ஆசிரியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாகவும், இந்த "விடியாத அரசு" 2026 தேர்தலில் மக்களிடம் தகுந்த பதிலைப் பெறும் என்றும் அவர் கூறினார்.
திண்டுக்கல்லில் நீட் தேர்வில் மாணவி ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து மோசடி செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது குறித்த கேள்விக்கு, "நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள் இன்னும் அதை செய்யவில்லை. இப்போது நீட் தேர்விலேயே வந்து நிற்கிறார்கள்," என்று திமுக அரசை விமர்சித்தார். நீட் தேர்வு மூலம் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு கிடைப்பதாகவும், மேலப்பாளையத்தில் 10 பேருக்கு இடம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எந்த கட்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்ற திருமாவளவனின் கருத்துக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அவர்கள் வெற்றி பெறுவோம் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும்," என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.