ஒரே பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி...

மருத்துவக் கனவுகளை சுமந்து வாழ்ந்து வருவோருக்கு தன்னம்பிக்கையை விதைக்கும் விதமாக தேர்ச்சி பெற்று அசத்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கவுரவம் என்ன?
ஒரே பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி...
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வயலோகம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 798 மாணவர்கள் பயின்று வரும் இந்த பள்ளியில் பள்ளி நேரம் போக, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தலைமை ஆசிரியர் ஜெயராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனிக்கவனம் எடுத்து மருத்துவம், என்டி.ஐ. மற்றும் சிவில் தேர்வுகளுக்கும், உயர் பொறுப்புகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பாண்டில் நடந்த நீட் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 33 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 28 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கும், ஐந்து பேர் பி.டி.எஸ். படிப்பிற்கும் தேர்வான நிலையில், இவர்களில் 5 பேர் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

2021- 2022-ம் கல்வியாண்டில் படித்த சுதாகர் மற்றும் சுபாஸ்ரீ, 2022- 2023 கல்வியாண்டில் படித்த ஆர்த்தி, ஜெயந்தி, கடல்வேந்தன் ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின்படி மருத்துவப்படிப்பில் சேர உள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் சங்கத் தலைவர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேடையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கப்பட்டதுடன், ஸ்டெத்தஸ்கோப் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களுக்கு ஊக்கம் அளித்து முன்னேற்றத்துக்கு காரணமான பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ், இதுவரை வயலோகம அரசுப் பள்ளியில் இருந்து 8 பேர் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின்கீழ் தேர்வாகியிருப்பதாக கூறியவர் வருங்காலங்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வைப்பதே இலக்கு என்றும் பேசினார்.

மருத்துவப் படிப்பு என்பது கனவாகிப் போய் விடுமா? என்ற நிலையை மாற்றி, விடாமுயற்சியால் வெற்றியை தனதாக்கியிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களை, அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com