

தமிழகத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு இருசக்கர வாகனத்தில் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து 56 லட்சம் ஹவாலா பணத்தை கடத்திய நபரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஹவாலா பணம் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக கூறப்படுகிறது.
தமிழக கேரள எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடியில் கந்தேகவுண்டன் சாவடி போலீசார் இன்று காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் கோவையில் இருந்து கேரளாவை நோக்கி வந்த நபர், போலீசாரை பார்த்ததும் வேகமாக திரும்பி சென்றார்.
இதனையடுத்து போலீசார் இரு சக்கர வாகனத்தில் திரும்பிச் சென்ற நபரை விரட்டி பிடித்து அவரது வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டாங்கில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அதில் கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக இருசக்கர வாகனத்தையும், அதை ஓட்டி வந்த கேரளா மாநிலம் பெருந்தல்மன்னா, மலப்புரத்தை சேர்ந்த ஷபீக் என்பவரையும் சோதனை சாவடிக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இரு சக்கர வாகனத்தில் இருக்கையின் கீழ் பகுதி மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து அதில் 56 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், போலீசார் விசாரணையில் அது ஹாவாலா பணம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 56 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும், பணத்தை கடத்தி சென்ற கேரளாவை சேர்ந்த ஷபீக் என்பவரையும் வருமானவரிதுறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.