சென்னை மாநகராட்சியில் 4 மற்றும் 5ஆம் மண்டலங்களில் பணி புரியும் தூய்மை பணியாளர்களின் பணியை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழாவது நாளாக சென்னை மாநகராட்சி அலுவலகம் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் , இன்று போராட்ட குழு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய போராட்ட குழு , பொது மக்களின் பொது சுகாதார நலன் கருதி நாங்கள் எங்களுடைய பணி நிரந்தரம் அவுட்சோர்சிங் தொடர்பான பிரதான கோரிக்கையை நீதிமன்றத்தின் முடிவிற்கு விட்டுவிட்டு 31-7- 2025 அன்று என்ன பணி நிலையில் பணி செய்தோமோ அதே பணி நிலையில் பணி அளித்தால் உடனே பணிக்கு வர தயாராக இருப்பதாக கடிதம் கொடுத்துள்ளோம்.
அதே வேளையில் தாங்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்றாலும் பொதுமக்களின் நலன் கருதி 5 மற்றும் 6 மண்டலங்களில் உள்ள குப்பைகளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் 500தூய்மை பணியாளர்களுடன் குப்பைகளை அகற்ற உள்ளோம். போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இந்த பணியை மேற்கொள்ள உள்ளோம். மேலும் இதற்கு அரசாங்கம் சம்பளம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்களுக்கு பொதுமக்கள் மீதும் அக்கறை உள்ளது எங்கள் வாழ்க்கை நிலையை பாதுகாப்பதிலும் அக்கறை உள்ளது. அதன் அடிப்படையில் தான் பிரதான கோரிக்கையை நீதிமன்றத்தின் இடையே விட்டுவிட்டு பணியில் எந்த நிபந்தனையும் இல்லாமல் 31/7/2025 அன்று என்ன பணி நிலைமையில் மாநகராட்சியில் பணி செய்தோமோ அதே பணி நிலைமையை மாநகராட்சி ஊழியராக பணியில் சேர தயாராக உள்ளோம்.
போராட்டம் தொடருமா என்ற கேள்விக்கு, இது பற்றிய அரசாங்கம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் வரும் வெள்ளிக்கிழமை ஐந்தாவது மண்டலத்திலும் சனிக்கிழமை ஆறாவது மண்டலத்திலும் தேங்கியுள்ள குப்பைகளை 500 , 500 தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டே குப்பைகளை அகற்ற சம்மதித்து உள்ளோம் என்றனர்.
நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு எதுவும் அழைப்பு வரவில்லை என்றனர், 31/7/2025 அன்று என்ன பணிநிலையில் நாங்கள் வேலை செய்தோமோ அதே நிலையை தொடர அனுமதித்தால் நாங்கள் நாளையே பணிக்கு வர தயாராக உள்ளோம் என்றனர். மற்ற மண்டலங்களில் எல்லாம் 16,000 சம்பளமாக பெறுகின்றனர் நாங்கள் 23 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறோம்.
நேற்று பேச்சு வார்த்தையில் அமைச்சர்கள் அவர்களது தரப்பு நியாயங்களை கூறினார்கள். நாங்கள் எங்களது தரப்பு நியாயங்களை கூறினோம். அவர்கள் நிலையில் அவர்கள் இருந்தார்கள் எங்கள் தரப்பில் எங்களுடைய மூத்த வழக்கறிஞரும் ஆலோசகருமான குமாரசாமி அரசாங்கத்திற்கு ஒரு வாதத்தை முன் வைத்தார். அதில் அவர் உங்களது கோரிக்கையும் எங்களது கோரிக்கையும் நீதிமன்றத்தில் விட்டு விடலாம் என்றும் தற்போது உடனடி பிரச்சனையாக பணி வழங்குவது குறித்த முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார். அதன்படி நாளையே பணியை தொடர தயாராக உள்ளோம் என்றும் தற்போது நாங்கள் பணியை தொடர முன்வந்துள்ளோம் ஆனால் அவர்கள் பணித்தர மறுக்கிறார்கள் என்றும் கூறினர்.
தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று “நிரந்தரம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” என்ற வாதத்தை முன்னிறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தனர். மேலும் இதில் பல்வேறு மாணவர்களும் இணைந்து எங்களோடு போராட போகிறார்கள் என்று போராட்டக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.