
சென்னை திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி. 69 வயது மூதாட்டியான, இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மருத்துவ செலவிற்காக அதே பகுதியில் வசிக்கும் உமாபதி என்பவரிடம் தனது வீடுடன் கூடிய மனைப் பத்திரத்தை பத்திரப்பதிவு செய்து அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் பணமாய் பெற்றுள்ளார்.
பத்திரத்தில் 100 ரூபாய்-க்கு 2 ரூபாய் என பதிந்துவிட்டு 3.5 ரூபாய் வட்டித் தரவேண்டும் என உமாபதி கூறிய நிலையில் அதன்படி மாதம் 7 ஆயிரம் ரூபாய் வட்டியாக செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாந்திரகுமாரியின் மூத்த மகள் லதாவிற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த சாந்தகுமாரியால் வட்டிப் பணத்தை குறித்த நேரத்தில் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சாந்த குமாரி செலுத்தாத வட்டிப் பணத்திற்கு வட்டி போட்டு நிலுவையில் 1.50 லட்சம் ரூபாய் வட்டி மட்டும் செலுத்த வேண்டும் எனவும் அதற்கும் சேர்த்து பத்திரம் பதிந்து தரவேண்டும் எனவும் உமாபதி சாந்தகுமாரியிடம் எனக்கூறியுள்ளார். பின் உமாபதி மீண்டும் சாந்தகுமாரிக்கு புதிதாக பணம் கொடுத்ததுபோல் பத்திரம் தயாரித்ததாகவும், உமாபதி கூறியதன் பேரில் சாந்தகுமாரி அவர் மீதுள்ள நம்பிக்கையில் அவர் கொடுத்த பத்திரத்தை படித்து பார்க்காமல் கையொப்பம் இட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அசல், வட்டி நிலுவைத் தொகையை கணக்கிட்டு வட்டி நிலுவை மட்டும் 1.53 லட்சம், அசல் 2 லட்சம் மற்றும் பத்திரப்பதிவு செய்த வட்டி பாக்கி 1.50 லட்சம் என மொத்தம் 5 லட்சம் ரூபாயைக் கொடுத்தால் பத்திரப்பதிவை ரத்து செய்து தருவதாகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தகுமாரி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது நடைபெற்ற விசாரணையில் உமாபதி 3.50 லட்சம் பணம் கொடுத்தால் பத்திரப்பதிவை ரத்து செய்து தருவதாக காவல்துறையினர் முன்னிலையில் ஒப்புக்கொண்டார்.
பின்னர் கடந்த 2019 டிசம்பர், 2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மொத்தமாக உமாபதிக்கு 4.88 லட்சம் ரூபாய் சாந்தகுமாரி கொடுத்துள்ளார். அதன் பின்னும் பத்திரப் பதிவை ரத்து செய்து தராமலும், சாந்த குமாரியால் கொடுக்கப்பட்ட வட்டிப் பணத்தை அவர் கொடுக்கவில்லை என பொய் கூறியும் உமாபதி சாந்த குமாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு 5 லட்சம் பாக்கி என்று கூறியவர் அடுத்த ஆண்டே இன்னும் 10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாந்த குமாரி கடந்த மீண்டும் காவல்துறையை நாட காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் சட்ட ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று சிவில் வழக்காக மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாந்த குமாரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்தி 2 ரூபாய் வட்டி என்பது கந்துவட்டிதான் என உறுதி செய்து புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையர் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.
எனினும் திருநின்றவூர் காவல்துறையினர் உமாபதிக்கு சாதகமாகவே செயல்பட்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்ததாகக் கூறி சாந்த குமாரி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன் பதாகை ஏந்தி ஞாயம் கேட்டு மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் வாங்கிய 2 லட்சம் ரூபாய் பணத்திற்கு இதுவரை 4.88 லட்சம் ரூபாய் பணத்தை உமாபதிக்கு செலுத்தியுள்ளதாகவும், ஆனால் அவர் தனது பத்திரப் பதிவை ரத்து செய்து தராமல் தற்போது 14 லட்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறி மிரட்டி வருவதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரின் உத்தரவு இருந்தும் திருநின்றவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் சிவில் வழக்காகவே இதை கிடப்பில் போட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், உமாபதி தனது இடத்தை அபகரிக்கும் நோக்குடனேயே செயல்பட்டு தன்னிடம் வட்டிக்குமேல் வட்டி வாங்கி மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு கந்துவட்டி கொடுமை அளித்து வரும் உமாபதி என்பவரிடம் இருந்து தனது பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும், அவருக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.