நிறுவனர் இல்லை...பணத்தை ஏமாற்றி மக்களை அலைகழித்த நிதி நிறுவனம்!

நிறுவனர் இல்லை...பணத்தை ஏமாற்றி மக்களை அலைகழித்த நிதி நிறுவனம்!
Published on
Updated on
1 min read

தனியார் நிதி நிறுவனம் ஒன்று பல நூறு கோடி பண மோசடி செய்துள்ளதாக கூறி திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் ஏராளமானோர் புகார் மனு அளிக்க வருகை தந்ததால் பரபரப்பு நிலவியது.

ட்ராவல்ஸ் நிறுவனம்:

தஞ்சையில் ராஹத் கமாலுதீன் என்பவர் 'ராஹத்' என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் ஒரு பேருந்துக்கு பங்குத் தொகையாக 5 லட்சம் ரூபாய் என்ற அளவில் முதலீட்டாளர்களை கொண்டு பேருந்துகளை வாங்கி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தியதாக கூறப்படுகிறது. தஞ்சை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி உள்ளனர்.  19 வருடங்களாக செயல்பட்டு வந்த இந்த ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. 

பல நூறு கோடி ரூபாய் மோசடி:

இதன் நிறுவனர் ராகத் கமாலுதீன் அண்மையில் உயிரிழந்து விட்ட நிலையில், டிராவல்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வந்தவர்கள் பணம் வழங்காமல் அலை கழித்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டார்களிடம் இருந்து பெற்ற பல நூறு கோடி ரூபாயை இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, தஞ்சை எஸ்பி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் அளித்தும் 9 மாதங்களாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

பதாகைகளை ஏந்தி போராட்டம்:

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு இன்று வருகை தந்தனர். அவர்களை காவல்துறையினர் அனுமதிக்காததால் பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் நிதி நிறுவனத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கை:

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பேசிய போது, தங்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தினருடன் சென்னையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com