“பாலியல் குற்றங்களை தடுக்க வக்கில்லாத அரசு” - ஸ்டாலின் கடும் கண்டனம்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் சூடுபிடிக்கும் அரசியல்!

மாநிலம் முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசு
அனிதா ராதாகிருஷ்ணன்
Published on
Updated on
1 min read

திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் அமைச்சராக அவர் உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதுடன், கலவரத்தைத் தூண்டும் விதமாகவும், முதலமைச்சர் விஜயை ஒருமையில் குறிப்பிட்டு பேசியதாகவும் குற்றஞ்சாட்டி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில், "முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்ற காரணத்தைக் கூறி, மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவசரமாக கைது செய்திருப்பது 'Take Diversion' அரசின் செயல். மாநிலம் முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசு, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் மட்டும் தீவிரம் காட்டுகிறது. ஆணவம் அழிவிற்கு வழி" என்று விமர்சித்துள்ளார்.

திமுக MP கனிமொழி, "முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருந்த எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அராஜகமான முறையில் கைது செய்துள்ளது தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது" என்று தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். "தமிழ்நாடு முழுவதும் சீர்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கை சீரமைப்பதில் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் அரசு காட்டியுள்ளது. பொய் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் திமுகவை முடக்க முடியும் என்று அரசு நினைத்தால் அது ஒருபோதும் நிறைவேறாது" என்று அவர் தெரிவித்துள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தொடர்ந்து மாறி மாறி கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com