
கலப்புத் திருமணம் செய்தவர் தற்கொலை. மருமகள் கொன்று விட்டதாக மாமனார் புகார் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, முக்காணி காந்தி நகரை சார்ந்தவர் சாமிநாதன் இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளது.
இவர்களது 2வது மகன் முத்து செல்வம் (42) இவர், டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஆத்தூர் பகுதியை சார்ந்த கீதா என்ற பெண்ணை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில், மூத்த மகன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
இதைத் தொடர்ந்து இரண்டு மகன்களுடன் முத்துச்செல்வம் கீதாவும் முக்காணி காந்தி நகரில் வசித்து வந்துள்ளனர். கீதா அங்குள்ள பால்வாடி பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக முத்து செல்வத்திற்கும் கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கீதா ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இருவரையும் அழைத்து பேசி சமாதானமாக அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து முத்து செல்வம் அவரது அப்பா வீட்டிலேயே இருந்து கொண்டு அவ்வப்போது தனது மனைவி வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணி அளவில் முத்து செல்வம் அவரது வீட்டில் பேனில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது மனைவி கீதா கொடுத்த தகவலின் பெயரில் முத்துச்செல்வம் அண்ணன் முத்து கண்ணன் மற்றும் சிலர் சேர்ந்து அங்கு சென்று பார்த்த போது பேனில் சேலையால் கட்டி கழுத்தில் சுருக்கு போட்டு முத்து செல்வத்தின் உடல் தரையில் முட்டி போட்டு கிடந்துள்ளார்.
அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக முத்து செல்வத்தின் தாயார் சரஸ்வதி ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனது மகனை மருமகள் கீதா கொன்று விட்டதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து முத்து செல்வத்தின் தந்தை சாமிநாதன் மற்றும் அவர்களது உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து இச் சம்பவத்தில் தொடர்புடைய தனது மருமகளை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.