
ஒரு காலத்தில் வைகோ பேசுகிறார் என்றால் அவர் பேச்சை கேட்கவே கூட்டம் அலைமோதும். 3 மணிநேரம் தொடர்ந்து பேசின்லயும் மக்கள் தொய்வின்றி கேட்டுக்கொண்டிருப்பர்.அப்படி திறம்பட பேசும் ஒரு முதுபெரும் தலைவர்தான் வைகோ. ஆனால் வயது ஆக ஆக கட்சியில் குளறுபடிகள் ஏற்பட ஏற்பட அவருக்கான புகழ் வெளிச்சமும் மங்க துவங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று மதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிக்கொண்டிருந்த போது தொண்டர்கள் கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர். அதனை, படம் பிடித்த பத்திரிகையாளர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேடையில் இருந்தபடி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், அங்கிருந்த தொண்டர்களிடம் பத்திரிகையாளர்களின் ஒளிப்பதிவு கருவிகளை பறிக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த மதிமுக தொண்டர்கள் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒளிப்பதிவு கருவிகளை சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மூத்த அரசியல்வாதியான வைகோ அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது கடுமையான கண்டனத்திற்குரியது. வைகோ அவர்களின் இந்த செயலையும், பத்திரிகையாளர்களை தாக்கிய மதிமுக தொண்டர்களையும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வைகோவின் மீதும் காவல்துறை உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்த மன நிலைக்கு யார் காரணம்
சமீப காலமாக மதிமுக சில சிக்கல்களை சந்தித்து வருகிறது. “வைகோவின் மகனும் கட்சியின் செயலாளருமான துரை வைகோ கட்சிக்குள் இருக்கும் சில பேர் மதிமுகவை உடைக்க திட்டமா தீட்டுவதாகவும் தந்தையும் தலைவருமான வைகோவை பாதுகாப்பதே என் கடமை அதனால் நான் கட்சியை விட்டு விலகுகிறேன் என பகிரங்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.” ஆனால் பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் இந்த பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டது. ஆனாலும் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி சிக்கல்கள், கட்சிக்கான வேலைதிட்பம் என பலதும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கலாம்.. ஆனால் இந்த முதுபெரும் அரசியல் தலைவர் இதுவரை தனது அரசியல் வரலாற்றில் செய்யாத ஒன்றை செய்துள்ளார் என்றே கூறவேண்டும்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் துரை வைகோ அறிக்கை ஒன்றை வெளியிற்றுகிறார். அதில் “செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பது நாடறிந்த உண்மை ஆகும்.
நேற்று மாலையில் நெல்லை மண்டல மறுமலர்ச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் சாத்தூரில் நடந்தது. மூன்றாயிரம் பேர் திரண்டு வந்ததால் மண்டபம் நிறைந்து, வெளியே ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து இருந்தனர்.
தலைவர் வைகோ அவர்கள் இரவு 8 மணிக்கு பேசத் தொடங்கி ஒரு மணி நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் மண்டபத்துக்கு உள்ளே இருந்த தொண்டர்கள் சிலர் எழுந்து வெளியே சென்றனர். சற்று நேரத்தில் மின்சாரம் வந்ததும் தலைவர் பேசத் தொடங்கினார்.
அந்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்ததை பார்த்த தலைவர் அவர்கள், "மாலை நான்கு மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஐந்து மணி நேரமாக உள்ளே அமர்ந்திருக்கின்றனர்.
மின்சாரம் தடைப்பட்டதும் சற்று நேரம் வெளியே சென்றபோது படம் எடுக்கிறீர்களே, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, அங்க போய் படம் எடுப்பீர்களா? "என்று கேட்டார்.தொடர்ந்து ஒளிப்பதிவு செய்ததால் ஊடகவியலாளர்கள் வெளியே செல்லலாம் என்று தலைவர் அறிவுறுத்திய போது சில தொண்டர்கள் ஆத்திரமடைந்தனர். அதன் பின்னர் நடந்தவை விரும்பத் தகாதது ஆகும். மறுமலர்ச்சி திமுகவின் 31 ஆண்டுகால வரலாற்றில் செய்தியாளர்களிடம் தொண்டர்கள் இவ்வாறு என்றும் நடந்து கொண்டது இல்லை. கட்சி அலுவலகத்தில் தலைவரிடம் ஒரு ஊடகவியலாளர் ,அவரது நேர்மையான பொது வாழ்க்கை குறித்து அவதூறான கேள்வி எழுப்பிய போதும் நேர்காணலை நிறுத்திவிட்டு அவரை பாதுகாப்பாக வெளியேற ஏற்பாடு செய்தவர் தலைவர் வைகோ .
செய்தியாளர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் தோழமை உணர்வோடு தான் பழகி வருகிறேன். எந்த கேள்வி எழுப்பினாலும் இன்முகம் காட்டியே பதில் கூறுகின்றேன்.
ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால் பத்திரிக்கை சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் மறுமலர்ச்சி திமுகவின் கருத்து ஆகும்.
சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு , தனிப்பட்ட முறையிலும் கழகத்தின் சார்பிலும் பத்திரிக்கை ஊடக நண்பர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.