

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, "குரங்கை விட அதிக கட்சி தாவிய ஒரு மந்திரி மிசா பற்றி கேள்வி எழுப்புகிறார். மிசாவில் கைது செய்யப்பட்டு இப்போது வரை உயிரோடு இருப்பவர்கள் அனைவரும், ஸ்டாலின் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டது உண்மை என்கின்றனர். வீரமணி தாய் கழகத்தைச் சேர்ந்தவர் என்கிறீர்கள். தியாகு பொதுவுடைமைவாதி, நடுநிலையாளர். அவரும் ஸ்டாலின் அடி வாங்கியது எல்லாம் உண்மை என்கிறார்.
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடினர். அப்போது எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி எப்படியெல்லாம் அரசியலமைப்புச் சட்டத்தை கொலை செய்தார் என 3 நாட்கள் விவாதித்தனர். அதில் திமுக சார்பாக நான் பேசினேன். மோடி, அமித்ஷா உட்பட பாஜக, கம்யூனிஸ்டுகள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரின் முன்னிலையிலும் பேசினேன்."
"இந்த அரசியல் சட்டத்தில் இருக்கிற உரிமைகள் எல்லாம் மிசா காலத்தில் பறிக்கப்பட்டதாகச் சொன்னீர்கள். உண்மைதான். ஆனால், அதைவிடக் கொடுங்கோன்மையான ஆட்சியை நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்" எனக் குற்றம் சாட்டினேன்.
"எமர்ஜென்சி பெரும் கொடுமை என நீங்கள் சொல்வது உண்மைதான். எங்கள் ஊருக்கும் இந்திரா காந்தி வந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். எங்களை விடவா நீங்கள் கொடுமைகளைச் சந்தித்தீர்கள்?" எனப் பேசினேன்.
"தென்னாப்பிரிக்காவில் ஒரு பெண் கவிஞர் அரசுக்கு எதிராகக் கொந்தளிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது நீதிமன்ற விசாரணையில், சிறையில் ஏதேனும் கொடுமைகள் நடந்ததா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. காவலர்கள் அவரை மிரட்டியதால் சுருக்கமாகச் சொன்னார். 'எனக்கு எந்தச் சித்திரவதையும் நடக்கவில்லை.. ஆனால், காவலர்கள் வைத்திருக்கக்கூடிய லத்திக்கு விந்து பாய்ச்சும் சக்தி இருந்தால், நான் 3 மாத கர்ப்பிணி.' என்றார். இதைவிடக் கொடுமை எங்கள் தலைவர் ஸ்டாலினுக்கு நடந்திருக்கிறது" எனப் பேசினேன்.
"நாடாளுமன்றத்தில் அத்தனை பேர் முன்னிலையில் பேசும்போது, யாரும் அது பொய் என மறுக்கவில்லையே? அவர்களுக்கெல்லாம் மிசா பற்றி தெரியாதா?
இப்போது ஒருவர் இதற்காகச் சிறைக்குப் போகவில்லை. அதற்காகப் போகவில்லை எனப் பேசுகிறார். எனக்குக்கூட நீ யாருக்காகப் பிறந்தாய் என்பதில் சந்தேகம் இருக்கிறது. நான் கேட்கலாமா? நீ என் தலைவனின் தியாகத்தைச் சந்தேகிக்கும் போது, நான் உன் பிறப்பைச் சந்தேகிக்கிறேன். வழக்குப் போட்டுக்கொள்!" எனப் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.