கைவினைக் கலைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தெற்கு ரயில்வே வழங்கும் அரிய வாய்ப்பு...!

கைவினைக் கலைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தெற்கு ரயில்வே வழங்கும் அரிய வாய்ப்பு...!
Published on
Updated on
1 min read

‘ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு' திட்டத்தில் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் என்று விருப்பமுள்ள தகுதியான கைவினைக் கலைஞர்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னைக் கோட்டத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் 'ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு' விற்பனைக் கடையை நடத்துவதற்கு விருப்பமுள்ள தகுதியான கைவினைக் கலைஞர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

'ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு' திட்டமானது, உள்ளூர், உள்நாட்டு தயாரிப்புகளுக்கான சந்தையை ஏற்படுத்தும் நோக்கிலும், சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினருக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், விளிம்பு நிலையில் உள்ள தனிநபர்களுக்கு, ரயில் நிலையங்களில் 15 நாட்களுக்கு, குறைந்த அளவு கட்டணமான 1000 ரூபாய்க்கு ரயில் நிலையங்களில் கடைகளை நடத்த, இந்தியன் ரயில்வே அனுமதி வழங்குகிறது.

இதில், கலைவினைஞர், நெசவாளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், TRIFED, NHDC, KVIC முதலியவற்றில் பதிவுசெய்துள்ள தனிநபர் கைவினைகலைஞர்கள், நெசவாளர்கள், PMEGP இல் பதிவுசெய்துள்ள சுய உதவிக் குழுவினர் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலை அல்லது நலிவுற்ற பிரிவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்த கடைகளில், ஏற்கனவே விற்பனையாகிக் கொண்டிருக்கும் காஞ்சிபுரம் பட்டுகள், ஆரணிப்பு பட்டுகள், கைத்தறிப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், மரபுவழி தின்பண்டங்கள், மரபுவழி உணவுகள், மூலிகை, இயற்கை தயாரிப்புகள், தோல் பொருட்கள், காட்டுத் தேன், ஆயுர்வேத எண்ணெய் மற்றும் கலவைகள், ஊட்டச்சத்துக் கலவைகள், வீட்டிலேயே தயாராகும் பூஜைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து கொள்ளலாம். 

ஆர்வமுள்ள தகுதியுள்ள நபர்கள், அடுத்த 10 நாட்களுக்குள், சென்னைக் கோட்டத்தின் ஏதாவது ரயில் நிலையத்தில் உள்ள நிலைய பொறுப்பாளரை அணுகி உரிய ஆவணங்களுடன், கோரிக்கை விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com