கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மூங்கில்விளை பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் இருந்து ராங் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசுபவர் பெண் என்பதை அறிந்தவர், மெல்ல மெல்ல பேச்சுக் கொடுத்து காதல் வலையில் வீழ்த்தினார்.
இதையடுத்து காதலனின் அன்பில் ஊறித் திளைத்தவர், காதலன் வசித்து வந்த பகுதி அருகாமையில் விடுதியில் தங்கி வேலை பார்த்தார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்து நெருங்கிப் பழகினர்.
இதனால் அந்த பெண் இரண்டு முறை கர்ப்பமாகி, கருவையும் கலைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சந்தோஷிடம், தன்னை எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என இளம்பெண் அடிக்கடி கேட்டார்.
இதனால் வெறுப்படைந்த சந்தோஷ், சாதியை காரணம் காட்டி அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தார். 10 வருடங்களாக பழகி விட்டு திருமணம் செய்ய மறுத்த சந்தோஷ் மீது பாதிக்கப்பட்ட பெண், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் காதலன் சந்தோஷ், தன்னிடம் இனிக்க இனிக்க பேசிய ஆடியோவையும் ஆதாரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆனால் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தப்படாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் மற்றும் அவரது உறவினர்கள் காவல்நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் ஜெயராஜ், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் கூடுவாஞ்சேரி காவல்நிலைய வளாகத்தில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.