டிடிவி தினகரன் தனது கொள்கையில் இருந்து பின்வாங்கி உள்ளதாகவும், சசிகலா - டிடிவி தினகரனுக்கு இடையே நடக்கும் பிரச்சனையில் நாங்கள் பலியாக விரும்பவில்லை என்பதாலும் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக மாவட்டச் செயலாளர் பாலச்சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைவு:
அமமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பாலச்சுந்தரம், கிழக்கு மாவட்டச் செயலாளர் அய்யனார் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி நேற்று மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
எடப்பாடியிடம் வாழ்த்து பெற்ற மாவட்டச் செயலாளர்கள்:
இதனைத் தொடர்ந்து, இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து அவர்கள் வாழ்த்து பெற்றனர்.
உண்மையான அதிமுக எடப்பாடி தான்:
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம், தாங்கள் அனைவரும் தற்போது தான் உண்மையான அதிமுகவில் இணைந்துள்ளதாக கூறிய அவர், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சிறுமிகளின் கோரிக்கையும்...அமைச்சர் உதயநிதியின் தீர்வும்...!
கொள்கையிலிருந்து மாறிய டிடிவி:
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வேன் என்று கூறிவந்த டிடிவி தினகரன், தற்போது தனது கொள்கையிலிருந்து மாறுபட்டு செயல்படுகிறார் என்றும், சசிகலா - டிடிவி தினகரன் இடையே நடக்கும் சண்டைக்கு நாங்கள் பலியாக விரும்பவில்லை, அதனால் தான் அமமுகவிலிருந்து விலகி உண்மையான அதிமுகவில் இணைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஓபிஎஸ் உடன் இணையும் டிடிவி:
மேலும், சசிகலாவுக்கு ஆதரவான தொலைக்காட்சியில் கூட டிடிவியின் செய்திகளை ஒளிபரப்புவது இல்லை என்று கூறிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கட்சியை பிளவு படுத்திய ஓபிஎஸ் உடன் டிடிவி இணைந்து வருகிறார் என்று பாலசுந்தரம் விமர்சித்துள்ளார்.