
கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பால் கலப்படம் தொடர்பாக முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட 28 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து டேங்கர் லாரியில் கொண்டுவரப்பட்ட பாலை திருடி விட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை கலந்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த இந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் அதிமுகவின் மாவட்டச் செயலாளர் வைத்தியநாதன், அவரது மனைவி உள்ளிட்ட 28 பேருக்கு எதிராக, விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டபட்ட வைத்தியநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, கலப்பட முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அதில், பால் ஏதும் திருடப்படவில்லை என்றும், டேங்கர் லாரிக்கு வைக்கப்பட்டிருந்த சீல் சேதப்படுத்தப்படவில்லை என்றும், பாலில் எந்த கலப்படமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய நீதிபதி, வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால், 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதால் எந்த பயனும் இல்லை எனக் கூறி, மனுதாரர்கள் மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்ட 28 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.