பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி ஆலயம் மற்றும் அதற்கு சொந்தமான நிலங்கள் பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது. இதனால் கிராம மக்கள் சிவாலயத்திற்கு சென்று வழிபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களின் இந்த இன்னல் குறித்து மாலை முரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சுப்பிரமணி தலைமையிலான அதிகாரிகள் தனியார் பள்ளி அமைந்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி காவலாளி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதனால், காவலாளிக்கும், அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மதுரைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒருமணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, நிலத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் வைத்தியநாத சுவாமி கோவில் இருந்த அடையாளத்தை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள நிலம் ஆக்கிரமிப்பில் இருந்ததையும் உறுதி செய்தனர். இதனையடுத்து, வருவாய் துறையினருடன் இணைந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாலை முரசு தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியாக கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.