தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை விறுவிறுப்பாகத் தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து கொண்டிருக்கும் வேளையில், திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு அதிகாலையிலேயே வருகை தந்தார். மற்ற வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் முன்பே தனது வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவும் அவர் மிகவும் சீக்கிரமாகவே அங்கு வந்து சேர்ந்தார்.
வாக்குச்சாவடிக்கு அஜித் வரப்போகிறார் என்ற தகவல் பரவியதுமே, நள்ளிரவு முதலே அந்தப் பகுதியில் ஏராளமான ரசிகர்கள் குவியத் தொடங்கினர். அஜித் தனது காரில் இருந்து இறங்கியதுமே அங்கு கூடியிருந்த ரசிகர்கள் 'தல' என கோஷமிட்டு அவரை உற்சாகப்படுத்தினர். இதனால் திருவான்மியூர் பகுதியில் ஒரு வித பரபரப்பான சூழல் நிலவியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு ஏற்கனவே ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அஜித்தைக் கண்டதும் ரசிகர்கள் முண்டியடித்தனர்.
வெள்ளை உடையில் வந்த அஜித், தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குப்பதிவு முடிந்து வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றனர். ஆனால் அவர் புன்னகையுடனே கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்