

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எந்தக் கூட்டணியில் சேரும்? அல்லது தனித்துப் போட்டியிடுமா? என்பது குறித்து ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்துள்ளார். தற்போதைய சூழலில் கூட்டணி என்பது மக்களுடன் இணைந்தது கிடையாது என்றும், பல கூட்டணிகள் முகம் மற்றும் மூளை இல்லாத உடல்களைப் போலச் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அதாவது, தற்போதைய கூட்டணிகள் வெறும் எண்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், கொள்கை ரீதியானது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், தமிழக வெற்றிக் கழகம் நேரடியாக மக்களுடன், ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் ஊடுருவியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற பெரிய கட்சிகளின் வீடுகளுக்குள்ளேயே விஜய்யின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்றும் திமுக மாவட்டச் செயலாளர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் கூட விஜய்க்கு ஓட்டுப் போடத் தயாராகிவிட்டதாக அவர் கூறினார். பூத் லெவல் ஆய்வுகளில் கிடைத்த தகவலின்படி, அனைத்துக் கட்சிக் குடும்பங்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் இருப்பதாகவும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு 70 முதல் 80 சதவீதத்திற்கும் மேலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசுகையில், மற்ற கட்சிகள் தேர்தலுக்காகத் திடீரென இலவசங்களை அறிவிப்பதைப் போல விஜய் செயல்பட மாட்டார் என்று அவர் கூறினார். மாதம் 2,000 ரூபாய் அல்லது இலவச லேப்டாப் போன்ற அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் செயல்கள் என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் ஆட்சியில் இருந்தும் செய்யாததை இப்போது சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய் எதை நிறைவேற்ற முடியுமோ அதை மட்டுமே வாக்குறுதியாக அளிப்பார் என்றும், அவருடைய ஒவ்வொரு கையெழுத்தும் அடுத்த தலைமுறையை உருவாக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கையூட்டினார்.
மேலும், விஜய் அடுத்த 25 ஆண்டுகாலத் தமிழகத்திற்கான ஒரு மெகா தேர்தல் அறிக்கையை ரிலீஸ் செய்யப்போவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். இது வெறும் 5 ஆண்டுகால ஆட்சி மாற்றத்திற்கான அறிக்கை மட்டுமல்ல, தமிழகத்தின் அடுத்த தலைமுறையை வடிவமைக்கும் தொலைநோக்குப் பார்வையாக இருக்கும் என்று அவர் கூறினார். விஜய்யின் பிரச்சாரப் பயணங்கள் ஈரோட்டில் தொடங்கியது போலத் தமிழகம் முழுவதும் மிக விரைவில் வரிசையாக நடக்கப்போவதாகவும், அதற்கான கமிட்டி ரிப்போர்ட்ஸ் விஜய்யிடம் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்துப் பேசிய அவர், இந்தப் படத்தை முடக்குவதற்குப் பின்னால் பாஜக மற்றும் திமுக ஆகிய இரண்டு தரப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சூசகமாகத் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி தொடர்புடைய படங்கள் சரியாக ரிலீஸ் ஆகிறது, அதில் நடித்தவர்கள் டெல்லியில் பொங்கல் கொண்டாடுகின்றனர். ஆனால் விஜய்யின் படம் மட்டும் முடக்கப்படுவது உள்நோக்கம் கொண்டது. இதற்கான பதவியைத் தேர்தலிலும், நீதிமன்றத்திலும் மக்கள் வழங்குவார்கள் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.