தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையில் தான் அதிக மழை பொழிவானது காணப்படுகிறது. அதுவும் இந்த மழையானது முதலில் கேரளாவில் இருந்து ஆரம்பமாகி தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா என அடுத்தடுத்து பிற மாநிலங்களிலும் பரவலாக காணப்படும்.
வழக்கமாக , கேரளாவில் தென்மேற்கு பருவமழை என்பது மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும். அதன்படி, இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் ஜூன் 1 அல்லது 4 ஆம் தேதி துவங்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், ஜூன் 4 ஆம் தேதி துவங்கவில்லை.
தொடர்ந்து, தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மழை, வெள்ளத்திலிருந்து காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகள் பற்றி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை, காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.