மெரினாவை தொடர்ந்து பெசன்ட் நகரிலும் மாற்றுத்திறனாளிகள் கடலை ரசிக்க மரப்பாதை...

மெரினாவை தொடர்ந்து பெசன்ட் நகரிலும் மாற்றுத்திறனாளிகள் கடலை ரசிக்க மரப்பாதை...
Published on
Updated on
2 min read

பெசன்ட் நகர் கடற்கரையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் பொழுதுகளை கழித்து வருகின்றனர். ஆனால் மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகே போய் அமர்ந்து, மனதார மனம் குளிர அலைகளை ரசிப்பது ஒரு கனவாகவும், குறையாகவே இருந்து வருவதுடன் பெரும் சவாலாகவும் இருக்கிறது.

சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது...

இதன்படி மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்ஃபி பாயின்ட் பின்புறம் மணல் பரப்பில் 380 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ஒரு கோடி ரூபாய் செலவில் பாதை அமைக்கப்பட்டது.

இதனை போன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் மரத்தால் ஆன பாதை அமைக்கப்படுகிறது. தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் மற்றும் காவல் நிலைய பூத்திற்கு இடைப்பட்ட இடத்தில் இது உருவாக்கப்படுகிறது. ஒரு கோடியே 63 லட்ச ரூபாய் செலவில் 300 மீட்டர் நீளத்திலும், 3 மீட்டர் அகலத்திலும் மரப்பாதை அமைக்கப்படுகிறது.

மரத்தில் பாதை அமைக்கப்படுவதால் அதற்கு தேவையான மரச்சாமான்கள் கொண்டு வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி பாதை அமையவுள்ள இடத்தை அளந்து இருபுறமும் கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை 6 மாதத்தில் முடிக்க திட்டமிட்டு இருந்தாலும் 4 மாதத்தில் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

ஆமைகள் கடல் பரப்பிற்கு வந்து முட்டை போட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடும். இதன் காரணமாக சிமென்ட், கான்கீரிட் போன்ற நிரந்தர கட்டுமானங்களை எழுப்ப முடியாது. ஆகையால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டுதான் கட்டுமானங்களை அமைக்க வேண்டும். அதன்படி மரத்தால் கட்டுமானம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரைக்கு போகவேண்டும் என்றால் எல்லோருக்கும் ஆசையாக தான் இருக்கும். ஆனால் மாற்றுத் திறனாளிகள் இந்த மணலில் நடந்து கடற்கரைக்கு செல்ல முடியாது. இந்த மரப்பாதை அமைக்கப்படுவதால் மாற்று திறனாளிகளுக்கு மிக எளிதாக கடற்கரையில் போய் வர முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு நடைபாதை பயனுள்ளதாக இருப்பதாகவும், அதேபோல பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பாதை அமைக்கப்படுவது,மிக சிறப்பானது என்றும் இதன் மூலமாக மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகையும், அலை ஓசையும் ரசிக்கும் படியாக இருக்கும் என்று தங்களது ஆவலை தெரிவிக்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.

குறிப்பாக குழந்தைகள் முதியோர்கள் என அனைவரும் கடலின் அழகை ரசித்து, மன மகிழ்ச்சியடைய இத்திட்டம் பெரும் வரப்பிரசாதம் தான்.

இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மரப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் மனதில் எழும் கோரிக்கை.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com