

2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக -கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக -வின் நிலை அப்படி இல்லை. பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்தே பஞ்சாயத்துதான். மேலும் எடப்பாடி உள்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கததால்தான் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் கழன்று விட்டனர். அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த செங்கோட்டையனின் நீக்கம். ஏற்கனவே இருவருக்கும் முரண்கள் இருந்தாலும், ‘பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்’ என எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். உடனே செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனும், தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் இது எடப்பாடிக்கு மிகவும், பின்னடைவாக கருதப்பட்டது.
இந்த பின்னணியில் தான், ஓபிஎஸ் டெல்லி சென்று வந்தார். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுக்குழு நேற்று நடைபெற்றது. இதில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தாற்காலிக அவை தலைவராக கே.பி. முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடிக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஓபிஎஸ் -க்கு ஆபத்தாக அமைந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக எடப்பாடியை விமர்சிக்காமல் இருந்த, டிடிவிக்கும் ஏமாற்றம் தான் என்று சொல்லப்படுகிறது. இனி நிச்சயம் எடப்பாடி ஒருபோதும் ஓபிஎஸ் -ஐ கட்சிக்குள் சேர்க்க மாட்டார் என்று சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு, புதுவை, கேரளாவில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு பெறலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில்,
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 - திங்கட் கிழமை முதல் 23.12.2025 செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்; முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.