மதுரை வந்தடைந்தது அதிமுக ரயில்!

மதுரை வந்தடைந்தது அதிமுக ரயில்!
Published on
Updated on
2 min read

அதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூரில் இருந்து சென்ற சிறப்பு ரயில் மூலம் புறப்பட்ட அதிமுக தொண்டர்கள் மதுரையை சென்றடைந்தனர். 

மதுரை வளையங்குளம் பகுதியில் அதிமுக சார்பில் நாளை எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சித் தொண்டர்கள், உறுப்பினர்கள் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

அதற்கான முன்னேற்பாடு பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது பிரமாண்ட நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான விழா மேடை சுமார் 60 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கான்கிரீட் தளம் கொண்டு 200-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும் வகையில் எல் இ டி திரைகளுடன் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. 

மாநாட்டிற்கு வருகை தரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் தகரக் கொட்டைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேடையின் இரு புறமும் கூடுதலாக 50 ஆயிரம் நாற்காலிகள் அமைக்கப்பட்டு நான்கு மிகப்பெரிய எல்இடி திரையரங்குகளும் 12க்கும் மேற்பட்ட சிறிய எல்இடி திரையரங்குகளும் வைக்கப்பட்டுள்ளது. 

அனைத்து இடங்களிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தற்போது மாநாடு நடைபெறும் இடம் முழுவதும் விழா கோலம் பூண்டு காணப்படுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் அதிமுக எழுச்சி மாநாடு அன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஹெலிகாப்டர் மூலம் பூக்களை தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக மாநாட்டிற்காக நேற்று இரவு 11.30 மணி அளவில் சென்னையிலிருந்து  13 பெட்டிகளுடன் சென்ற சிறப்பு குளிர்சாதன ரயிலில் பயணித்த ஆயிரத்து 300 அதிமுக தொண்டர்கள் மதுரையை சென்றடைந்தனர்.

அதிமுக மாநாட்டிற்கு சிறப்பு ரயில் மட்டுமின்றி வழக்கமான ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த சிறப்பு ரயிலின் ஜன்னல் முழுவதும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு அழைக்கிறோம் என்று வசனங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

ஒவ்வொரு பெட்டிக்கும் ஒவ்வொரு செக்யூரிட்டி அமர்த்தப்பட்டு தொண்டர்களை பாதுகாப்பான முறையில் மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com