இந்துகள் இல்ல காதணி விழாவிற்கு சீர்வரிசையோடு வந்த இஸ்லாமிய மக்கள்..!

காதணி விழாவிற்கு மயிலாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், செண்டை மேளங்கள் என பாரம்பரிய கலைகளோடு 101 வகையான தட்டுத் தாம்புலங்களில் சீர்வரிசையோடு வருகை தந்த தாய்மாமன்கள். 
இந்துகள் இல்ல காதணி விழாவிற்கு சீர்வரிசையோடு வந்த இஸ்லாமிய மக்கள்..!
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியா குமார் என்பவரது மூன்று குழந்தைகளுக்கும், இன்று நெடுவாசல் கிழக்கு சிவன் கோவிலில் காதணி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வந்த குழந்தைகள், தாய்மாமன்கள் நாட்டியக் குதிரைகள் நடனமாட அதன்மீது அமர்ந்தவாறு வந்தனர். மேலும், பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் செண்டை மேளங்கள் என பலத்த ஆரவாரத்தோடு நடந்தது. பின்னர் 101 தட்டுகளில் தங்க நகைகள், பழங்கள், ஆடைகள் என பாரம்பரிய முறைப்படி சீர்வரிசைகளை சுமந்து, நெடுவாசல் கடைவீதியில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். 

மேலும், இந்த விழாவிற்கு இஸ்லாமிய மக்களும் சீர்வரிசைத் தட்டுகளை கொண்டு வந்து பங்கேற்றனர். அவர்களை நெடுவாசல் கிராம மக்கள் சந்தனமிட்டு வரவேற்று  மூண்டு குழந்தைகளுக்கும் காதணி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து விழாவிற்கு வந்திருந்த இஸ்லாமிய மக்கள் சீர்வரிசையாக நகைகளை குழ்நதைகளுக்கு அணிவித்து மகிழ்ந்தனர்.

இது குறித்து நெடுவாசல் சுற்றுவட்டார கிராம மக்கள், நாகரீகம் பெருகி உறவுகளை மறந்து வரும் காலத்திலும், தொண்மை மாறாமல் பாரம்பரிய முறைப்படி ஆட்டம் பாட்டத்துடன் செண்டை மேளங்கள் முழங்க சீர்வரிசை கொண்டு வரும் தாய்மாமன்களும், சாதி, மத பேதமின்றி இஸ்லாமியர்களும் சீர்வரிசைகளோடு இந்து விழாவில் கலந்து கொள்வதும் தங்கள் பகுதியின் அடையாளமாக நீடித்திருக்கின்றது என பெருமிதத்துடன் தெரிவித்து வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com