மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை தொடர்பான கேள்வி விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அரக்கோணம் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் ரவி, மது அருந்துவோரின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு, இது தான் திமுக அரசின் சாதனையா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா காலத்தில் மது நுகர்வோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருந்ததாகவும், தற்போது மது அருந்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளதே தவிர அதிகமாகவில்லை என்றும் கூறியவர், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளதாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய ரவி, ஊரகவளர்ச்சி, எரிசக்தி துறைக்கு கடந்த ஆண்டை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டிற்கும் விளக்கமளித்த நிதியமைச்சர், ஊரக வளர்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டை விட 9 புள்ளி 4 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்தார்.