”பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”. - மனோ தங்கராஜ்.

”பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”. - மனோ தங்கராஜ்.
Published on
Updated on
2 min read

கலப்பின மாடுகளின் தரம் மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எச்.பி.எஃப் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் பிரிவான கருவூல ஜெர்சி மற்றும் பொலிகாளை பண்ணையில் சிறந்த மரபு திறனுள்ள உயர்ரக ஜெர்சி, ஃப்ரீசியன் மற்றும் கலப்பு இன காளைகள் என மொத்தம் 187 காளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இப்பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் பொலிகாளைகளிலிருந்து உறை விந்து குச்சி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டலுக்காக விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில் இப்பண்ணையினை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் பேசிய அமைச்சர்,  ஆவின் நிறுவனம் மூலம் உதகையில் செயல்பட்டு வரும் செயற்கை கருவூட்டல் மையம் தரமான முறையில் செயல்பட்டு வருவதாக கூறினார்.

அதையடுத்து,  இங்கு பராமரிக்கப்பட்டு வரும் 187 ஜெர்சி, ஃப்ரீசியன் காளைகள் மூலம் தரமான கலப்பினம் மற்றும் பாலின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆண்டிற்கு 15 லட்சத்திற்கு மேல் செயற்கை கருவூட்டலுக்கான ஊசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் தமிழகத்தில் ஆவின் கூட்டுறவு நிறுவனங்களில் கடன் உதவிகள் பெற படித்த இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவதாக கூறியவர், தமிழகத்தில் பால் விவசாயம் என்பது ஒரு நிலையான வாழ்வாதாரத்தை தரக்கூடிய நிலையில் பால் உற்பத்தியில் லாபத்தை ஈட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து உதகையை அடுத்த அப்புகோடு கிராமத்தில் புதிய ஆவின் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்கத்தினை திறந்து வைத்தார். பின்னர்,  தமிழ்நாடு அரசு சார்பில் கோமாரி நோய் தடுப்பு இலவச முகம் மற்றும் விழிப்புணர்வு முகாமையும் துவக்கி  வைத்து, மாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித், பால்வளத்துறை இயக்குனர் உள்பட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com