“ஆளுநர் பதவியை உயர்த்திக் காட்டும் தந்திரமாகவே இவை அனைத்தும்....” முரசொலி தலையங்கம்!!

“ஆளுநர் பதவியை உயர்த்திக் காட்டும் தந்திரமாகவே இவை அனைத்தும்....” முரசொலி தலையங்கம்!!
Published on
Updated on
1 min read

உபகாரம் பண்ணவில்லை என்றாலும் உபத்திரவம் பண்ணாமல் இருங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சித்து முரசொலி தலையங்கத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் எனவும் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் எழுதியுள்ள முரசொலி
மேலும் மத்தியில் ஆளும் பாஜகவிடம் சொல்லி தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு ஆளுநர் முயற்சிக்கலாம் எனவும் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம் எனவும் கூறியுள்ளது.  

தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இரண்டாவது செங்கல்லை வாங்கித் தரலாம் எனவும் புதிய ரயில்வே திட்டங்களைப் பெற்றுத் தரலாம் எனவும் மாநில ஆட்சிக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக ஆளுநர் இருக்கலாம் எனவும் எழுதியுள்ள முரசொலி ஆனால் அது எதையும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யத் தயாராக இல்லை எனவும் அதற்கான எந்த முயற்சிகளிலும் அவர் ஈடுபடவில்லை எனவும் எழுதியுள்ளது.

அதனை தொடர்ந்து தினந்தோறும் யாரையாவது கூட்டி வைத்துக் கொண்டு ஆளுநர் வகுப்பு எடுக்கிறார் எனவும் அவர் வகுப்பு எடுக்கட்டும் அவ்வாறு எடுப்பது தவறில்லை எனவும் கூறியுள்ள முரசொலி அதில் மொத்தமும் தவறான பாடங்களைச் சொல்லித் தந்து கொண்டு இருக்கிறார் எனவும் எழுதியுள்ளது.

மேலும் ஆளுநர் பிரிட்டிஷ் ஆட்சி மீது அவரது கோபத்தை இன்னமும் காட்டிக் கொண்டு இருக்கிறார் எனவும் பிரிட்டிஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்ட பதவிதான் ஆளுநர் பதவி என்பது அதிலும் உட்கார்ந்து கொண்டு தான் இருக்கிறார் அதனோடு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஐபிஎஸ் பதவி அந்த வேலையிலும் தான் அவர் பணியாற்றி இருக்கிறார் எனவும் எழுதியுள்ள முரசொலி அவ்வாறு இருந்தும் ஏன் இன்னும் பிரிட்டிஷ் ஆட்சியை பழித்து வருகிறார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

'அனைவர்க்கும் பொதுவான சட்டத்தை' பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிவிட்டது தான் இவருக்கு இருக்கும் கோபம் எனவும் வர்ணத்தையும், சனாதனத்தையும் ஆதரித்து அவர் பேசி வருவதே அத்துமீறல் தான் எனவும் கூறியுள்ள முரசொலி தமிழ்நாடு வளர்கிறது அதனுடன் தமிழர்கள் அனை வரும் வளர்ந்து வருகிறார்கள் என்பதை ஆளுநருக்கு காணப் பொறுக்கவில்லை எனவும் எழுதியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு இணையாக நியமன பதவியான ஆளுநர் பதவியை உயர்த்திக் காட்டும் தந்திரமாக இவை அனைத்தும் செய்யப்படுகின்றன எனவும் மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்றும், ஆளுநர் அதனை மறந்துவிட்டு 'தி கிரேட் டிக்ரேட்டராக' தன்னை நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார் என்பதை இங்கு நினைவுப்படுத்திய முரசொலி இதை ஆளுநர் உணர்ந்தாக வேண்டும் என கடுமையாக விமர்ச்சித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com