"சுங்கச்சாவடிகளில் கட்டணக் கொள்ளை...தணிக்கை செய்ய வேண்டும்" அன்புமணி  ராமதாஸ்!!

"சுங்கச்சாவடிகளில் கட்டணக் கொள்ளை...தணிக்கை செய்ய வேண்டும்" அன்புமணி  ராமதாஸ்!!
Published on
Updated on
1 min read

சுங்கச் சாவடிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுங்கச் சாவடிகளில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச் சாவடியில் விதிகளுக்கு முரணாக 28 கோடி ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  தென்மாநிலங்களில் உள்ள 5 சுங்கச் சாவடிகளில் இருந்து மட்டும் 132 கோடி ரூபாய் அரசு விதிகளை மதிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

திருத்தப்பட்ட சுங்கக்கட்டண விதிகளின்படி, நான்கு வழிச்சாலைகள் ஆறுவழிச் சாலைகளாகவோ,  எட்டுவழிச் சாலைகளாகவோ தரம் உயர்த்தப்படும் போது, கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தில் 75  மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சுங்கக்கட்டணத்தைக் குறைக்காமல் வழக்கமான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூலித்திருப்பதாக கூறியுள்ளார். 

அதேபோல், 1956 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற விதிகளை மீறி மதுராந்தகம் அருகில் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலத்திற்கு 2017 மற்றும் 2021 காலத்தில்  22 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக்கூடாது என்பதால் பரனூர் சுங்கச்சாவடியில் தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com