"Zero Government".. புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த அன்புமணி.. மோடியே எதிர்பார்க்காத 'ஆக்ரோஷ' உரை!

பிரதமர் மோடி மிகுந்த கவனத்துடன் அவரது பேச்சைக் கவனித்துத் தனது ரியாக்‌ஷன்களை வெளிப்படுத்தினார்...
"Zero Government".. புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த அன்புமணி.. மோடியே எதிர்பார்க்காத 'ஆக்ரோஷ' உரை!
Published on
Updated on
2 min read

தமிழக அரசியல் களம் தற்போது தேர்தல் திருவிழாவாக மாறியுள்ளது. குறிப்பாக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆற்றிய உரை கவனத்தைப் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், திமுக அரசின் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடுகளைப் புள்ளிவிவரங்களுடன் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார்.

தனது உரையின் தொடக்கத்திலேயே பிரதமர் மோடியை 2047-ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற உழைக்கும் தலைவர் என்று புகழ்ந்த அன்புமணி ராமதாஸ், அதே மேடையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியை "இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தின் முதலமைச்சராக வர இருப்பவர்" என்று அறிமுகப்படுத்தினார். இது அங்கிருந்த அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. "இன்றுதான் திமுக ஆட்சியின் முடிவிற்கான தொடக்கம்" என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் முழங்கியபோது, மேடையில் இருந்த பிரதமர் மோடி அவர்கள் மிகுந்த கவனத்துடன் அவரது பேச்சைக் கவனித்துத் தனது ரியாக்‌ஷன்களை வெளிப்படுத்தினார்.

திமுக அரசை "பூஜ்ஜியம் அரசு" (Zero Government) என்று வர்ணித்த அன்புமணி ராமதாஸ், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள், எத்தனை புதிய மாவட்டங்கள், எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இவை அனைத்திற்கும் விடை "பூஜ்ஜியம்" தான் என்று அவர் குறிப்பிட்டபோது கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது. திமுக அரசு என்பது தகுதி இல்லாதவர்கள், திறமை இல்லாதவர்கள் மற்றும் நேர்மை இல்லாதவர்களின் ஆட்சி என்றும், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிரான இந்த "கஞ்சா ஆட்சியை" விரட்டியடிக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.

ஊழல் குறித்த புகார்களை முன்வைத்த அன்புமணி ராமதாஸ், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் திமுக அரசு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மணல் கொள்ளையில் 4,750 கோடி, நகராட்சித் துறை ஒப்பந்தங்களில் 2,000 கோடி, டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனையில் 5,000 கோடி என ஒவ்வொரு துறை வாரியாக அவர் பட்டியலிட்ட புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டு, மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாகச் சாடினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை "பொய் சொல்வதில் முதலிடம் வகிப்பவர்" என்று விமர்சித்த அவர், தேர்தல் நேரத்தில் அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளது என்றார். இது வெறும் 13 விழுக்காடு மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், ஒரு தேர்வில் 100-க்கு 35 மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பெற முடியும், ஆனால் வெறும் 13 மதிப்பெண் எடுத்த "பெயிலான கட்சி" திமுக என்று கேலி செய்தார். நீட் ரத்து, கல்விக்கடன் ரத்து போன்ற பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துத் தமிழகத்தை திமுக ஒரு நரகமாக மாற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இறுதியாக ஒரு மருத்துவராகத் தனது கவலையைத் தெரிவித்த அன்புமணி ராமதாஸ், தமிழகத்தின் 43,000 கிராமங்களிலும் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் பரவி இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்து வருவதாகக் கூறினார். தமிழகத் தாய்மார்களும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த "போதை கலாச்சார" ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திமுக அரசின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன என்றும், வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com