
அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்.
இது பாமக -வில் பெரும் பதட்டத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் பாமக -வின் மகளிரணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன, இது முடிந்த உடனேயே பொதுக்குழு கூட்டப்பட்ட உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் தன் மகனுக்குமான உறவு பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார், அன்புமணி மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டே, களத்தில் வேலை பார்க்கவில்லை, கிராமம் கிராமமாக செல்லவில்லை என்பதுதான் ஆனால் தற்போது அவர்தான் உரிமை மீட்பு பயணம் செய்கிறாரே என கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த ராமதாஸ் “ இது உரிமை மீட்பு பயணம் அல்ல… என்னோடு இருக்கும் மக்களை பிரித்து, கட்சியை உறிஞ்சும் செயல்” என பேசியிருந்தார். தொடர்ந்து 9 ஆம் தேதி அன்புமணி பொதுக்குழு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார், ஆனால் ராமதாஸ் தரப்பில் ஏற்கனவே 17 -ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என சொல்லப்பட்டிருந்தது, இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்த கேள்விக்கு “அவர் எப்படி பொதுக்குழு நடத்த முடியும். நான்தான் அவருக்கு அழைப்பே விடுக்க முடியும், பாமக சட்ட விதிகளின் படி அதற்கு இடமே இல்லை. அவர் பொதுக்குழு நடத்தினால் அது தேவையற்ற வன்முறைக்கு வழி வகுக்கும், எனவே நாங்கள் அதை சட்ட ரீதியாக அணுகுவோம் என ஏற்கனவே பேசியிருந்தார்..
அதன்படி, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும் மனுவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவரும், நிறுவனருமான ராமதாசின் அனுமதியில்லாமல் அன்புமணி 100 நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கெதிராக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அன்புமணியின் இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஒருவேளை அன்புமணியின் பொதுக்குழு தடை செய்யப்பட்டால், 17 -ஆம்தேதி ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு அன்புமணியின் பதவி பறிக்கப்படலாம், அது அவருக்கு மேலும் ஆபத்து என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.