``கோபம் அவர் மீதா?.. முதலமைச்சர் விஜய் மீதா?" சாமானியரை தாக்கிய தவெக MLA.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

"வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் ஜோசப் விஜய், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இது தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா?" - டிடிவி தினகரன் கேள்வி
 TVK MLA Attacks Common Man, TTV Dhinakaran Strongly Criticizes!
``கோபம் அவர் மீதா?.. முதலமைச்சர் விஜய் மீதா?" சாமானியரை தாக்கிய தவெக MLA.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
Published on: 
Updated on: 
1 min read

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவி சங்கர், தன்னிடம் தொகுதியில் உள்ள குறைகள் பற்றி முறையிட வந்தவரை அடித்ததாக வெளியான வீடியோ அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வீடியோவில் அடி வாங்கிய கார்த்திக் குமார் என்ற நபர் இதுகுறித்து முதலில் ஒரு வீடியோவில் பேசியிருந்தார். பின்னர் துணை சபாநாயகர் ரவி சங்கர் உடன் இருக்கும் வீடியோ ஒன்றில் தாக்குதல் நடக்கவில்லை என்ற வகையில் பேசியிருந்தார்.

பின்னர் மற்றொரு வீடியோவில் 2வது வீடியோ தன்னை மிரட்டி பேச வைக்கப்பட்டது எனக் கூறியுள்ளார். தொகுதி பிரச்சனையை சொன்னவரை தாக்கியது மட்டுமில்லாமல் மிரட்டி வீடியோவும் எடுத்துள்ளார் துணை சபாநாயகர் என தவெக அரசு மீது விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

அந்தவகையில் டிடிவி தினகரன், "தொகுதியில் நிலவும் பிரச்னையை பற்றி கூற வந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்- இது மக்கள் ஆட்சி அல்ல தற்குறிகளின் ஆட்சி தான் என அடித்து நிரூபித்துள்ளார் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர்!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், அவரை வைத்து விளக்க வீடியோ வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.
விஜய்க்காக ஓட்டு போட்டவன் என பலமுறை பாதிக்கப்பட்ட நபர் சொன்ன பின்பும், அவரை ரவி சங்கர் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியிருப்பதை பார்க்கும் போது அவருக்கு கோபம் தனக்கு வாக்களித்தவர் மீதா? அல்லது ஏதோ தனது ஆசையை விஜய் அவர்கள் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் அவர் மீது ஏற்பட்ட கோபமா? என்ற சந்தேகமே எழுகிறது.

மக்களோடு மக்களாக நிற்பவர்களைத் தான் வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்கள், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இது தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா?

எனவே, தொகுதி பிரச்னையை கூற வந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் பிரநிதிநிதிகள் ஆளப்பிறந்தவர்கள் அல்ல மக்களுக்காக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்." என விமர்சித்துள்ளார்.