அண்ணாமலை போட்ட ட்வீட்...திமுக.,விற்கு மறைமுக மிரட்டலா?

போற போக்கை பார்த்தால் கல்வி கொள்கையை தாண்டி பல பிரச்சனைகள் பூதாகரமாக கிளம்பும் போல தெரிகிறது..
annamalai vs dmk
annamalai vs dmkAdmin
Published on
Updated on
2 min read

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலையிலேயே தன்னுடைய எக்ஸ் தளத்தில் சிம்பிளாக ஒரு போஸ்டை போட்டு, தமிழக அரசியலையே கதி கலங்க வைத்துள்ளார். குறிப்பாக ஆளும் கட்சியான திமுக., மற்றும் அதன் தலைமைக்கு இந்த போஸ்ட் செம கடுப்பாக்கி இருந்தாலும், சற்று பயத்தையும் கொடுத்துள்ளதை மறுக்க முடியாது.

அண்ணாமலை போட்ட போஸ்ட் :

தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக மற்றும் திமுக இடையே மிக கடுமையான மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இருவரில் யார் சொல்வது சரி என ஒரு முடிவுக்கு வர முடியாமல் மக்களும் இன்னும் குழப்பத்தால் தான் இருக்கிறார்கள். மற்றொருபுறம் பார்லிமென்ட்டில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்.பி.,க்கள் பற்றி பேசிய பேச்சு தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில், " டில்லி மதுபான ஊழல்...சத்தீஸ்கர் மதுபான ஊழல்...தமிழ்நாடு மதுபான ஊழல்" என காலையிலேயே தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதுக்கு என்ன அர்த்தம்?

இதற்கு என்ன அர்த்தம் என பலரும் கேட்டுக் கொண்டிருந்தாலும், அர்த்தம் புரிந்த சிலர் இது திமுக.,விற்கு மறைமுக மிரட்டலா அல்லது தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிளானை பாஜக., தயார் செய்து, அதை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்து விட்டதை தான் அண்ணாமலை இப்படி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளாரா என்று கேட்க துவங்கி உள்ளனர். அண்ணாமலை போட்டுள்ள போஸ்ட்டிற்கு இரண்டு அர்த்தங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று, தற்போதைய திமுக அரசுக்கு நெருக்கடி ஆரம்பமாகி விட்டது என்பது. மற்றொன்று சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து திமுக ஆட்சியை இழக்கும். அதற்கு பிறகு திமுக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது.

திமுக.,விற்கு மிரட்டலா?

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்த போதே மதுபான ஊழல் விவகாரம் பூதாகரமாக துவங்கி விட்டது. அவர் கைது செய்யப்பட்டு, பல முறை ஜாமின் மறுக்கப்பட்டு, அதற்கு பிறகு அடுத்தடுத்த நெருக்கடி காரணமாக தான் வேறு வழியில்லாமல் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. அதற்கு பிறகு சில மாதங்கள் மட்டுமே ஆம்ஆத்மி ஆட்சி டில்லியில் நடைபெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியையும் பறிகொடுத்தது. இதை வைத்து பார்த்தால் டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடந்ததை போல் மதுபான ஊழல் விவகாரத்தில் தமிழகத்திலும் கைது நடவடிக்கைகள், பதவி பறிப்பு, நெருக்கடிகள் ஏற்படலாம் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். இதை திமுக.,விற்கு பாஜக விடுக்கும் மறைமுக மிரட்டல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

என்ன சொல்ல வருகிறார் அண்ணாமலை?

அதே சமயம் சத்தீஸ்கரில் முன்னாள் முதல் பூபேஷ் பாகெல் மகன் வீட்டில் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடந்துள்ளது. இது தேர்தலுக்கு பிறகு திமுக ஆட்சியை இழந்தாலும் திமுக.,விற்கு நெருக்கடி ஏற்படும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். முதல்வரின் மகன் என்ற கோணத்தில் பார்த்தால் துணை முதல்வர் உதயநிதிக்கும் சேர்த்து பாஜக போட்டுள்ள ஸ்கெட்ச்சாக கூட எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் திமுக தலைமை மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எப்போது வேண்டுமானாலும் நெருக்கடிகள் ஏற்படும் என பாஜக விடுத்துள்ள மிரட்டலாக கூட எடுத்துக் கொள்ளலாம்.

மதுபான ஊழல் பிரச்சனையா?

தேசிய கல்வி கொள்கை விவகாரம் தீவிரமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் போது மதுபான ஊழல் பிரச்சனை எங்கிருந்து வந்தது? இது என்ன புது குண்டை போடுகிறார் அண்ணாமலை? என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. பாஜக, திமுக.,விற்கு நெருக்கடிகள் கொடுப்பதற்காக இன்னும் பல ஆயுதங்களை கையில் வைத்துள்ளதையே அண்ணாமலையின் போஸ்ட் காட்டுகிறது.

பாஜக-திமுக இதுவரை கல்வி கொள்கை விவகாரத்தில் சவால் தான் விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது மிரட்டல் விடுக்கும் அளவிற்கு வந்து விட்டார்கள். போகிற போக்கை பார்த்தால் கல்வி கொள்கையை தாண்டி பல பிரச்சனைகள் பூதாகரமாக கிளம்பும் போல தெரிகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com