தமிழக வெற்றிக் கழகம் அரசிடம் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணன் சீர் திட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
திருமணமாகும் பெண்களுக்கு பட்டுப் புடவையுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது அரசு.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு ரூ.812 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது தமிழ்நாடு அரசு இ-சேவை இணையதளமான https://www.tnesevai.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
திருமணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து, திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம். 5.10.2026 முதல் 15.1.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு 15.1.2027 வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பதற்கான தகுதிகளும் வரையறை செய்யப்பட்டுள்ளன.
1. திருமணத்தின் போது மணமக்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட திருமண வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரரின் (அதாவது மணப்பெண்) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் மணமகளின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
4. பிற துறைகள் / வாரியங்கள் மூலம் செயல்படுத்தப்படும் வேறு ஏதேனும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.
விண்ணப்பதாரர்களுக்கு தனித்துவமான விண்ணப்ப எண் வழங்கப்படுவதுடன், விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி (SMS), வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
தகுதியான பயனாளிகளுக்கு உரிய நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.