ஓ.பி.எஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தானாக விசாரணைக்கு எடுத்தது உயர் நீதிமன்றம்!

ஓ.பி.எஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தானாக விசாரணைக்கு எடுத்தது உயர் நீதிமன்றம்!
Published on
Updated on
1 min read

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்துள்ளது.

கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஒ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக, 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை  தாக்கல் செய்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் விசாரணை நடைமுறையில் பிரச்சனை உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமான முறையில் செயல்படாமல், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தியாக செயல்படுவதாகவும் கடுமையாக சாடினார். மேலும்  இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இந்த வழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ பன்னீர்செல்வம், விசாரணை  நடக்கட்டும் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com