
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம். அதன்படி மாநில முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் உள்ளன.
இந்நிலையில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள இடங்களில் 2023-24 ஆம் கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டிஇ எனப்படும் இலவச கல்வி திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதற்கான பணியினை ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலவச கல்வி திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கு தேவையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானவரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை முன்கூட்டியே பெற்றோர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.